தமிழகம்

பல லட்ச ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாத உரிகம் கால்நடை மருந்தகம்

கி.ஜெயகாந்தன்

ஓசூர்: உரிகத்தில் பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு, கடந்த 20 ஆண்டாக திறக்கப்படாமல் பாழ்பட்டு முடங்கியுள்ள கால்நடை மருந்தகத்தைச் சீரமைத்து, திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உரிகத்தைச் சுற்றிலும் 30-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் மக்களின் பிரதானத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இங்கு பெரும்பாலும் வானம் பார்த்த மானாவாரி நிலங்கள் அதிகம் உள்ளதால், இப்பகுதி விவசாயிகள் கால்நடை வளர்ப்பைச் சார்பு தொழிலாகச் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, நாட்டின மாடுகள், கோழிகள், ஆடுகளை வளர்த்து வருவதோடு, இப்பகுதியில் உள்ள வனங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புகின்றனர். இங்கு ஆண்டு முழுவதும் மாறுபட்ட சீசோஷ்ண நிலை நிலவுவதால், கால்நடைகளுக்கு அடிக்கடி நோய் பாதிப்பு ஏற்படுகிறது. நோய் பாதிக்கும் கால்நடைகளை சிகிச்சைக்காகத் தனி வாகனம் மூலம் அஞ்செட்டி மற்றும் தேன்கனிக்கோட்டைக்கு அழைத்துச் செல்லும் நிலையுள்ளது.

எனவே, உரிகத்தில் கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும் எனத் தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் உரிகத்தில் கால்நடை மருந்தகம் அமைக்க பல லட்ச ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், இன்று வரை கால்நடை மருந்தகத்தைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், கால்நடை மருந்தக புதிய கட்டிடம் செடி, கொடிகள் சூழ்ந்து பாழ்பட்டு, திறப்பு விழா காணாமல் முடங்கியுள்ளது. இப்பகுதி மக்கள் வழக்கம் போல கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 22 கிமீ தூரம் பயணிக்கும் நிலையுள்ளது.

இது தொடர்பாக உரிகம் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது: உரிகத்தை சுற்றியுள்ள மலைக் கிராம விவசாயிகள் பயன் பெறும் வகையில் கட்டப்பட்ட கால்நடை அரசு மருந்தகம் திறப்பு விழா காணாமல் முடங்கியுள்ளது. என்ன காரணம் என்பதும் தெரியவில்லை. இதனால், பொருளாதார வசதியில்லாதவர்கள் தங்கள் கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் போது தங்களுக்குத் தெரிந்த நாட்டு வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கின்றனர்.

இதில், பல கால்நடைகள் உயிரிழக்கும் நிலையுள்ளது. இந்நிலையைப் போக்க கால்நடை மருந்தகத்தைச் சீரமைத்துத் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT