சென்னை: தமிழகத்தில் ரூ.27.48 கோடி மதிப்பில், நவீன வடிவமைப்புடன் கூடிய 15 புதிய சார் பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள் கட்ட ஒரே நாளில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்திரப் பதிவுக்கு வரும் மக்களின் நலன் கருதி, அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடங்களைக் கட்டுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஒரே நாளில் அரசாணை: அதற்கிணங்க, நடப்பாண்டில் ஏற்கெனவே 44 புதிய அரசுக் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கி, அரசாணைகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து, ரூ.27.48 கோடி மதிப்பில் மேலும் 15 புதிய அரசுக் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கி, ஒரே நாளில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 15 வாடகைக் கட்டிடங்களில் செயல்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.
அடிப்படை வசதிகள்: ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு, அப்பகுதியிலேயே நவீன முறையில் சொந்த கட்டிடமும், நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடங்களில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகங்களான கள்ளிக்குடி, திருமங்கலம், வலங்கைமான், திருப்போரூர், பென்னாகரம், உப்பிலியாபுரம், நெல்லிக்குப்பம், விராலிமலை, முசிறி, காட்டுப்புத்தூர், அவிநாசி, குன்னத்தூர் மற்றும் கயத்தாறு ஆகிய 14 சார் பதிவாளர் அலுவலகங்களின் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு, அதே இடத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன், நவீன முறையில் புதிய வடிவமைப்புடன் கூடிய சொந்தக் கட்டிடங்களும் கட்டப்பட உள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.