புதுச்சேரி: மத்திய அரசு கட்டணக் குறைப்புடன் மாநில அரசு மானியத்தையும் சேர்த்தால் புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு காஸ் சிலிண்டர் விலை ரூ.500 வரை குறைகிறது. அதேபோல் மஞ்சள் ரேஷன் கார்டுக்கான சிலிண்டர் விலை ரூ.350 வரை குறைகிறது.
மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலையை ரூ.200 குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் ஏழைகள் பயன்படுத்தும் சிலிண்டருக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள ரூ.200 மானியத்துடன் தற்போதைய ரூ.200 விலைக்குறைப்பும் சேர்ந்து ரூ.400 வரை விலை குறைகிறது. மத்திய அரசின் இந்த கட்டணச் சலுகை நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
புதுவையில் ஏற்கெனவே மாநில அரசு சிவப்பு ரேஷன் கார்டுக்கு காஸ் சிலிண்டர் மானியம் ரூ.300, மஞ்சள் ரேஷன் கார்டுக்கு ரூ.150 வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த மானியம் ஆண்டுக்கு 12 காஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானியம் வழங்கும் திட்டம் சமீபத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது.
அமலுக்கு வரவில்லை: எனினும், மாநில அரசின் மானியம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் இதுவரை செலுத்தப்படவில்லை. முழுத்தொகை அளித்தே காஸ் சிலிண்டரை புதுச்சேரி மக்கள் பெற்று வருகின்றனர்.
அதே நேரத்தில் மத்திய அரசின் மானியம் வழங்கும் திட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. காஸ் சிலிண்டர் பதிவு செய்யும்போது மத்திய அரசின் மானியம் நேரடியாக குறைக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
புதுவை அரசும் மானியம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினால் சிவப்பு ரேஷன் கார்டுக்கு மத்திய அரசின் ரூ.200, மாநில அரசின் ரூ.300 சேர்த்து ரூ.500 சிலிண்டர் விலையில் குறையும். புதுச்சேரியில் மொத்தமுள்ள 3.5 லட்சம் ரேஷன் கார்டுகளில் 1.7 லட்சம் பேர் சிவப்பு ரேஷன் கார்டுகள் வைத்துள்ளனர்.
இதேபோல் மஞ்சள் ரேஷன் கார்டுக்கு மத்திய அரசின் விலை குறைப்பு ரூ.200 உடன், மாநில அரசின் மானியம் ரூ.150 சேர்த்து ரூ.350 சிலிண்டர் விலையில் குறையும். ஆனால், சிலிண்டரை பெற்றப் பிறகே பயனாளிகளின் வங்கிக் கணக்கில்தான் புதுச்சேரி அரசின் மானியம் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் அமல்: ‘புதுச்சேரிக்கான காஸ் சிலிண்டர் மானியம் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்?’ என்று சட்டப்பேரவைத்தலைவர் செல்வத்திடம் கேட்டபோது, அவர், "அரசாணை வெளியாகியுள்ளது. புதிய இயக்குநரால் இதில் தாமதம் ஏற்பட்டது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியவுடன் காஸ் ஏஜென்சிகளிடம் இருந்து பட்டியல் பெறப்பட்டுள்ளது.
விரைவில், அதன் அடிப்படையில் மானியத்தை வங்கிக்கணக்கில் செலுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன" என்று தெரிவித்தார்.