சென்னை: சிறைத்துறை பணியாளர்களின் வாரிசுகளுக்கு நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களை சிறைத் துறை டிஜிபி நேரில் அழைத்து பாராட்டினார்.
சிறைத் துறையில் (சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை) பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகளுக்கான தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் ஹரியாணா மாநிலத்தில் உள்ள குருசேத்திரா பல்கலைக்கழகத்தில் கடந்த 25 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றன. அப்போட்டியில் தமிழகத்திலிருந்து 7 பேர் கலந்துகொண்டு அனைவரும் பதக்கங்களை வென்றனர்.
தமிழகம் திரும்பிய அவர்களை சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி, எழும்பூரில் உள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்துக்கு நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் சிறைத்துறை டிஐஜி.க்கள் கனகராஜ் (தலைமையிடம்), ஆ.முருகேசன் (சென்னை சரகம்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வீரர்களுக்கு பயிற்சி அளித்த முதல்நிலை காவலர் எஸ்.ராஜரத்தினம், தலைமைக்காவலர் மாரிசெல்வம், பயிற்சி ஆசிரியர் ராஜேஷ்வரன் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர் பவானி ஆகியோருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் டிஜிபி தெரிவித்தார்.