சென்னை: போக்குவரத்துக் கழகங்களுக்கு பொதுவான நிலையாணை விதியை அமல்படுத்துவது தொடர்பாக, போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் சென்னையில் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
போக்குவரத்து துறை சார்பில், அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கான பொதுவான நிலையாணை விதியை அமல்படுத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சென்னை பல்லவன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமை வகித்தார். சிஐடியு சம்மேளனப் பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார், துணைப் பொது செயலாளர் வி.தயானந்தன் தொமுச பேரவை பொருளாளர் கி.நடராஜன், அண்ணா தொழிற்சங்கப் பேரவை பொதுச் செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் பொதுவான நிலையாணை விதியைஅமல்படுத்த வேண்டும் என்று தொழிங்சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். பொதுவானநிலையாணை விதியை அமல்படுத்துவது குறித்து வரைவு தயாரிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 15 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கூட்டம்நடைபெறும். அப்போது, பொதுவான நிலையாணை விதியை அமல்படுத்துவது தொடர்பாக வரைவுசமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு, ஆலோசனை நடத்தி, உரிய முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பேருந்துகளுக்கு புதிய நிறம்: பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறும்போது, "புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பேருந்துகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது விரைவில் நகர்ப்புற பேருந்துகளின் நிறமும் மாற்றப்பட உள்ளது. தமிழக முதல்வரிடம் இருந்து ஒப்புதல் வந்தவுடன், புதிய நிறம் அறிமுகப்படுத்தப்படும்" என்றார்.