தமிழகம்

மாயமான மீனவர்களை மீட்கும் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்: அன்புமணி

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்களில் சுமார் 800 மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கி மாயமாகியுள்ளனர்.

அவர்களின் நிலை குறித்து குடும்பத்தினர் கவலை கொண்டுள்ள நிலையில், அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

கன்னியாகுமரி, நீரோடி, தேங்காய்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே கரை திரும்பியுள்ளனர்.

மீதமுள்ள 800-க்கும் அதிகமான மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. சூறைக்காற்றில் அடித்துச் செல்லப்பட்ட அவர்கள் ஆளில்லாத தீவுகளில் படகுகளுடன் கரை ஒதுங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்களை கண்டுபிடித்து மீட்கும் பணிகளை தமிழக அரசு இன்னும் விரைவுபடுத்தவில்லை.

அண்டை மாநிலமான கேரளத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. கடலோரக்காவல்படை படகுகள், உலங்கு ஊர்திகள் ஆகியவற்றின் உதவியுடன் மீனவர்களைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், தமிழகத்தில் இந்தப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகின்றன.  இதனால் ஆத்திரமடைந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், காணாமல் போன மீனவர்களை விரைவாக மீட்டுத் தர வலியுறுத்தி தூத்தூர் உள்ளிட்ட இடங்களில்  சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், இந்தப் போராட்டத்திற்குப் பிறகும் மீட்புப் பணிகள் விரைவுபடுத்தப்படாதது கவலையளிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு தொடரும் நிலையில் தமிழக அரசு காட்டும் அலட்சியம்  மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

எனவே, இதில் இனியும் அலட்சியம் காட்டாமல் மத்திய அரசின் உதவியுடன், மாயமான மீனவர்களை மீட்கும் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்.

SCROLL FOR NEXT