மதுரை: கோடநாடு கொலை, கொள்ள வழக்கை தமிழக அரசு சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவரிடம், கோடநாடு என்றாலே, எடப்பாடி பழனிசாமிக்கு குலை நடுக்கம் ஏற்படுவதாக முரசொலி நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இதுதொடர்பாக நான் சட்டமன்றத்தில் கேட்டேன். முதல்வர் அப்போதே கூறியிருக்காலமே? இதுதொடர்பாக பல கேள்விகளை நான் சட்டமன்றத்தில் எழுப்பினேன். அப்போது ஏன் வாயை மூடிக் கொண்டிருந்தனர்.
ஒரு முதல்வர், ஆட்சியில் இருக்கும்போது பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன. இன்றைய ஆட்சியில் எத்தனை நிகழ்வுகள் நடக்கின்றன? திமுக ஆட்சியில் இருந்தபோது எத்தனை பேர் இறந்தனர்? அதையெல்லாம் நாங்கள் திருப்பி பார்க்க மாட்டோமா? நாங்கள் மறுபடியும் திரும்ப விசாரிக்க மாட்டோமா?அதிமுக ஆட்சியில் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. நாட்டில் எத்தனையோ சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆனால், இதை மட்டும் ஏன் திமுகவினர் மையமாக வைத்துக் கொண்டு பேசி வருகின்றனர். அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு செய்தியை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே, அவதூறு செய்தி பரப்பிய ஒருவர் மீது நான் தொடர்ந்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. நான் அடிக்கடி ஊடகம் மற்றும் பத்திரிகைகளில் தெளிவுபடுத்தியிருக்கிறேன். இதுகுறித்து சட்டமன்றத்திலும் பேசியிருக்கிறேன். ஆனால், ஏன் அந்த நாளேட்டில் அதுகுறித்து எல்லாம் குறிப்பிடவில்லை.
கோடநாடு சம்பவம் நடந்து முடிந்தவுடன், குற்றவாளிகளைக் கண்டுபிடித்தது, குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அரசாங்கம். அதிமுக ஆட்சியில்தான் இந்த வழக்கு நடைபெற்றது. வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, அந்த குற்றவாளிகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டது திமுக வழக்கறிஞர்கள். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே குற்றவாளிக்கு ஆதரவாக வாதிட்டுள்ளார். இதையெல்லாம் அந்த நாளேட்டில் குறிப்பிடவில்லை. இந்த குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்தவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். எனவே இதெல்லாம் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த வழக்கை ஏன் சிபிஐ விசாரிக்கக் கூடாது? தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அரசுக்கு சந்தேகம் இருப்பதால், சிபிஐ வசம் இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டும்" என்று கூறினார்.