சென்னை: பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு எதிரான 11 வழக்குகளில் 4 வழக்குகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம், 7 வழக்குகளை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும், இந்த வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ஹெச்.ராசா, அறநிலையத் துறை அதிகாரிகள், அவர்களின் குடும்பப் பெண்களை தரக்குறைவாக விமர்சித்துப் பேசியதாக சிவகாஞ்சி, கரூர், உதகை, திருவாரூர், ஈரோடு, விருதுநகர், இருக்கன்குடி ஆகிய 7 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதேபோல, சமூகவலைதள பதிவில் திமுக எம்.பி. கனிமொழியை விமர்சித்ததாக ஒரு வழக்கும், பெரியார் சிலை சேதப்படுத்தப்படும் என்ற ரீதியில் பதிவிட்டதாக 3 வழக்குகளும் ஹெச்.ராஜாவுக்கு எதிராக ஈரோடு நகர் காவல் நிலையத்தில் 2018-ல் பதிவு செய்யப்பட்டன.
இந்த 11 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி ஹெச்.ராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
ஹெச்.ராஜா தரப்பில் வழக்கறிஞர்கள் ஆர்.சி.பால்கனகராஜ், பி.ஜே.அனிதா ஆகியோரும், காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பி.பாபு முத்துமீரானும் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து, அறநிலையத் துறை ஊழியர்கள், அவர்களது குடும்ப பெண்களை தரக்குறைவாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளில் 4 வழக்குகளை நீதிபதி ரத்து செய்தார். எஞ்சிய 3 வழக்குகளை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, இந்த வழக்குகளை ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு சிறப்பு நீதிமன்றம் 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல, பெரியார் சிலை மற்றும் கனிமொழியை விமர்சித்தது தொடர்பான 4 வழக்குகளையும் ரத்து செய்ய மறுத்த நீதிபதி, சென்னை மற்றும் ஈரோடு மாவட்ட எம்.பி. எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த 4 வழக்குகளையும் 3 மாதங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.