சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்கப்பட்டதற்கு, அரசியல் கட்சிகளிடம் இருந்து வரவேற்பும், விமர்சனங்களும் வந்துள்ளன.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல உஜ்வாலா சமையல் எரிவாயு திட்டத்தின்கீழ், சமையல் எரிவாயு பயனாளிகளுக்கு ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு மேலும் ஓராண்டுக்கு ரூ.200 மானியம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் 9.6 கோடி உஜ்வாலா பயனாளிகள் ஒரு சிலிண்டருக்கு ரூ.400 மானியமாக பெறுவார்கள். இந்த அறிவிப்புகளுக்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: வீட்டு உபயோகத்துக்கான கேஸ் சிலிண்டரின் விலையை ரூ.200 குறைப்பதாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் உஜ்வாலா திட்டத்தில் அளிக்கப்பட்ட சிலிண்டர் இணைப்புக்கு கூடுதலாக ரூ.400 மானியம் அளிப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன்: கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி பதவி ஏற்றபோது ஒரு சிலிண்டரின் விலை ரூ.410. இப்போது ரூ.1,120. ஒரு சிலிண்டருக்கு ரூ.200-ஐ குறைத்தது ஓணத்துக்கான பரிசு என்றால், ரூ.830-ஐ படிப்படியாக ஏற்றியது எதற்கான தண்டனை என்பதை மத்திய அரசுதான் சொல்ல வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கிய பின், 2024 தேர்தலை நினைத்து பாஜக பதற்றத்தில் இருக்கிறது. இதனால் இத்தகைய பரிசுகளை அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அது தள்ளப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: பாஜக ஆட்சிக்கு வந்தபின் சிலிண்டர் மானியம் வெட்டப்பட்டு, ரூ.1,120 வரை கடுமையாக விலை ஏற்றப்பட்டது. எரிவாயு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையையும் கட்டுக்கடங்காமல் உயர்த்திவிட்டு, இப்போது சிலிண்டரின் விலையை குறைத்திருப்பது ஏமாற்று நாடகமே. எனவே, பழைய மானிய முறையை அமலாக்குவதுடன், எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.300 ஆக நிர்ணயித்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.