தமிழகம்

பறக்கும் ரயில் கடற்கரை வரை செல்லாததால் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து கூடுதல் பேருந்துகள்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது புதிய ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதனால், வேளச்சேரி - கடற்கரை பறக்கும் ரயில் வழித் தடத்தில் கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை வரைமட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் காலை, மாலையில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

நெரிசலை குறைக்க, 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் சேவை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கூடுதல் பேருந்துகளை இயக்கவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை முதல் கூடுதலாக 80 பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

பயணிகளுக்கு தடையின்றி பேருந்து வசதி கிடைக்க உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் வழியாக சென்ட்ரல், பாரிமுனை, திருவொற்றியூர், அண்ணாசதுக்கம், கடற்கரை நிலையம் வழியாக தினமும் 391 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுதவிர, சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கடந்த 27-ம் தேதி முதல் சென்ட்ரல், கோட்டை, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் தினமும் 140 சேவைகள் கூடுதலாக இயக்கப்பட்டன. இருப்பினும், பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், 29-ம் தேதி(நேற்று) காலை முதல் 80 சேவைகள் அதிகரித்து, 220 பேருந்து சேவைகளாக இயக்கப்படுகின்றன. தேவைக்கு ஏற்ப, பேருந்து சேவைகள் அதிகரிக்கப்படும் என்றனர்.

SCROLL FOR NEXT