சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான வசந்தகுமாரின் 3-ம் ஆண்டு நாள்நினைவு தின அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. அதில் கட்சியின் மாநிலத் தலைவர்கே.எஸ்.அழகிரி பங்கேற்று வசந்தகுமாரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: காவிரியில் இருந்து தண்ணீர்திறந்துவிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸும், தமிழக அரசோடு இணைந்து குரல் கொடுத்து வருகிறது. நாளொன்றுக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் விடப்படுகிறது. தண்ணீர் வருவதற்கு முன்பு, காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் தண்ணீர் கேட்க தமிழக அரசு தயங்குகிறது என தெரிவித்தனர்.
கர்நாடக பாஜகவினர் போராட்டம்: ஆனால் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்ட பிறகு, பாஜக முன்னாள் முதல்வர்கள் எஸ்.ஆர்.பொம்மை, எடியூரப்பா போன்றோர் தண்ணீர் திறந்துவிடக் கூடாது என போராட்டம் நடத்துகின்றனர். பாஜக தமிழகத்துக்கு எதிரான கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது.
தமிழகத்தில் பரனூர் சுங்கச் சாவடியில் ரூ.6 கோடியே 5 லட்சம்அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் 600 சுங்கச்சாவடிகள் உள்ளன. இங்கெல்லாம் முறைகேடாக வசூல் நடைபெற்றுள்ளதா என விளக்க வேண்டும். ஒரு கிமீ நீள விரைவுச் சாலை அமைக்க ரூ.18 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.250 கோடி செலவுசெய்து உள்ளனர். இது நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 278 சதவீதம் அதிகம். இதை எப்படி அனு மதித்தார்கள்?
ஆக.31-ல் பயற்சிப் பட்டறை: மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள ஆக.31-ம் தேதி டெல்டா உள்ளிட்ட 10 மாவட்டங்கள் அடங்கிய சோழ மண்டலத்தைச் சேர்ந்தவாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது. அதில் காங்கிரஸ் அகில இந்திய பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பங்கேற்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் ஆ.கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, உ.பலராமன், பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், கக்கனின் பேரன் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.