தமிழகம்

என்எல்சியை சுற்றி மாசு குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பு: பசுமை தீர்ப்பாயத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: என்எல்சியை சுற்றி மாசு ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசி யபசுமை தீர்ப்பாயத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

நெய்வேலி நிலக்கரி சுரங்கம்(NLC) மற்றும் அனல் மின் நிலையத்தால் அதனை சுற்றியுள்ள 8 கிமீ சுற்றளவில் உள்ள கிராமங்களில் நீர், நிலம் மாசுபட்டுள்ளதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கடந்த ஆக.8-ம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில் என்எல்சியின் 1-வதுசுரங்கத்துக்கு அருகில் வடக்குவெள்ளூர் கிராமத்தின் தொல்காப்பியர் நகரில் எடுக்கப்பட்ட நீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 250 மடங்கு பாதரசம் கலந்துள்ளது. 31 இடங்களில் செய்யப்பட்ட நீர் மற்றும் மண் பரிசோதனையில் 17 இடங்கள் மிகக் கடுமையாக மாசடைந்துள்ளன.

101 வீடுகளில் நடத்தப்பட்ட நேர்காணல் ஆய்வில் 89 வீடுகளில் தலா ஒருவருக்கு சிறுநீரகம், தோல், சுவாசம் சார்ந்த நோய்கள் இருப்பது தெரியவந்துள்ளது" என குறிப்பிட்டிருந்தது.

அதனடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது. இந்த வழக்கு கடந்த ஆக.10-ம் தேதி விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, என்எல்சி நிர்வாகம், கடலூர் மாவட்ட ஆட்சியர், தமிழக சுற்றுச்சூழல் துறை, மத்திய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவை பதில் அளிக்க வேண்டும்" என அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர்முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாசு ஏற்பட்டதாக ஆய்வறிக்கையில் குறிப்பிட்ட பகுதிகளில் நீர் மற்றும் மண்மாதிரிகளை ஆய்வு செய்ய, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கூடுதல்தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் ஆர்.ராஜமாணிக்கம், இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் ஏ.சாமுவேல் ராஜ்குமார், கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆர்.உமயகுஞ்சரம், மேம்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வக உதவி இயக்குநர்கள் சங்கரசுப்பிரமணியன், டி.சிற்றரசு ஆகிய 5 பேர் கொண்ட குழுஅமைக்கப்பட்டுள்ளது. இக்குழு சில இடங்களில் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளது. ஆய்வு முடிவு கிடைத்தவுடன் அமர்வில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.

அக்.10-ல் மீண்டும் விசாரணை: மற்ற எதிர்மனுதாரர்கள் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரிய நிலையில், வழக்கின் அடுத்த விசாரணையை அக்.10-ம் தேதிக்கு தள்ளிவைத்து, அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர்.

பசுமை தீர்ப்பாயம் முன்னெடுத்துள்ள இந்த விசாரணை, என்எல்சியின் செயல்பாடுகளால் விளையும் மாசுவை குறைக்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட நீதியை வழங்கும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT