தமிழகம்

தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸை வெளியேற்றினால் திமுகவுக்கு ஆதரவு தர தயார்: சீமான் உறுதி

செய்திப்பிரிவு

கரூர்: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சியை கூட்டணியிலிருந்து வெளியேற்றினால், வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிக்க தயார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோடநாடு விவகாரத்தில், கார் ஓட்டுநரின் அண்ணன் அளித்த பேட்டி காலதாமதம் என்றாலும் அது வரவேற்கத்தக்கது. இவரை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் தெரிவித்து இருக்கிறார். துணிந்து அவர் சொல்வதை வைத்து உடனடியாக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கூட்டணியில் இருந்த திமுக, நீட் தேர்வு மற்றும் கச்சத்தீவு விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நீட் தேர்வை கொண்டு வந்தது இண்டியா கூட்டணிதான். நீட் தேர்வு வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டு வென்றவர் நளினி சிதம்பரம். அந்த கட்சியை ஏன் கூட்டணியில் வைத்து உள்ளீர்கள்?

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சியை கூட்டணியிலிருந்து வெளியேற்றினால், வரும் மக்களவைத் தேர்தலில் நாங்கள் போட்டியிலிருந்து விலகிக் கொண்டு, திமுகவுக்கு ஆதரவு அளிக்க தயார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் என்னுடன் கூட்டணி வைக்க விருப்பப்பட்டால் இணைந்து செயல்படுவேன். தமிழகத்தின் பெருமை ரஜினிகாந்த். அவர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது தவறு இல்லை. அது அவருடைய சொந்த விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT