மதுரை: மதுரை ரயில் பெட்டி தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவத்தில் `அயோத்தி' திரைப்படத்தை மிஞ்சும் வகையில் அமைச்சர்கள், அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட மீட்புப் பணி மற்றும் மனிதாபிமான நடவடிக்கை பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
மதுரையில் ஆக.26-ம் தேதி காலை சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் இறந்தனர். இது குறித்து தகவலறிந்த தமிழக அரசு மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து மீட்பு நடவடிக்கையில் காட்டிய வேகம், மனிதாபிமான உணர்வு ஆகியவை உறவுகளை இழந்த சுற்றுலாப் பயணிகளை மனரீதியில் பெரிய அளவில் ஆறுதல்படுத்தியது. இது சமீபத்தில் வெளியான `அயோத்தி' திரைப்படத்தை மிஞ்சியது.
விபத்து நடந்த அன்று காலை 5.45 மணிக்கு தகவல் வெளியானதும் காலை 6.30 மணிக்குள் அமைச்சர் பி.மூர்த்தி சம்பவ இடத்துக்கு விரைந்தார். அப்போது விபத்து நடந்த இடத்துக்கு அருகே வசிக்கும் எல்லீஸ் நகர் போடி லைன் பகுதி மக்கள் பயணிகளை மீட்கும் பணியில் இறங்கினர்.
அமைச்சருடன் ஆட்சியர், மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அலுவலர்கள் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர். தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ், மருத்துவக் குழுவினர், ரயில்வே போலீஸார் என பலரும் ஒருசேர மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகளால் பல பயணிகள் காப்பற்றப்பட்டனர்.
மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் தலைமையில் சிறப்புக் குழு தயாராக இருந்து உயர் சிகிச்சை அளித்தது. சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனே மதுரைக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டோரைப் பார்த்து ஆறுதல் கூறினார். விபத்து நடந்த 6 மணி நேரத்தில் நிவாரண உதவிகளை அமைச்சர்களும், அதிகாரிகளும் மருத்துவமனைக்கு தேடிச்சென்று வழங்கினர்.
சென்னையிலிருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமானத்தில் மதுரை வந்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.
மேயர் இந்திராணி தலைமையிலான மாநகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் பல்வேறு அரசுத் துறையினர் 10-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை, சில மணி நேரங்களில் வழங்கினர். 5 சிறப்பு மருத்துவக் குழு அமைத்து மாலை 6 மணிக்குப் பின் ஆட்சியரின் சிறப்பு அனுமதியுடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல்தியாக ராஜன் ஆகியோர் இரவு 11 மணியளவில் அனைத்து உடல்களையும் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர். விபத்து நடந்த 17 மணி நேரத்துக்குள் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் முடித்து உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விமானம் மூலம் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டன.
துயரமான தருணத்தில் ஒரு அரசு நிர்வாகம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மிகச்சிறந்த பங்களிப்பை தமிழக அமைச்சர்கள் 3 பேரும் வழங்கினர். அனைத்துத் துறை அலுவலர்களும் 24 மணி நேரமும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினர். மொழி, மதம், மாநிலம் என அனைத்தையும் கடந்து மனிதயநேயம் மட்டுமே மேலோங்கியதால்தான் இந்தளவுக்கு ஈடுபாட்டுடன் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்பது கண்கூடாக தெரிந்தது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் மற்றும் முதியவர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு நன்றி தெரிவித்து அனுப்பிய தகவல் மீட்புப் பணி எப்படி இருந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது.
இது குறித்து சிறுவன், முதியவர் ஆகியோர் ட்விட்டரில் கூறியதாக அமைச்சர் அளித்த தகவல்: சிறுவன் தனது பதிவில் “மாமா, உங்களை நான் எப்போதும் மறக்கமாட்டேன்” என கூறியுள்ளார்.
முதியவர் தனது பதிவில், “எரிந்துகொண்டிருந்த நெருப்பிலிருந்து இறைவன் எங்களைக் காப்பாற்றினார். அதற்குப் பிறகு நீங்கள் அனைவரும் எங்களை மிக நன்றாக கவனித்துக்கொண்டீர்கள். உங்கள் மீது நாங்கள் அதீத நன்றி உணர்வுடன் உள்ளோம். எங்கள் மாநிலத்துக்கும் உங்களைப் போன்ற எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கிடைப்பார்கள் என்று நம்புகிறோம்” என கூறியுள்ளார்.
மீட்புப் பணிகள் குறித்து விவரித்த அமைச்சர் பி.மூர்த்தி, “முதல்வர் அவ்வப்போது நேரடியாக தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டார். அவரின் உத்தரவுப்படி மிக விரைந்து அனைத்து பணிகளையும் முடித்தோம்” என்றார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறும்போது, “துயரங்கள் நிகழும்போது, மனிதாபிமானம் மிக்க தமிழினத்தின் தனிப்பட்ட பண்பானது, திக்கற்றோரை தங்கள் குடும்ப உறவாக நினைத்து உதவுவதே. துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு உதவுவதை இயற்கையாகவே கொண்டுள்ள ஒரு சமூகத்தின் வழித்தோன்றல் என்ற முறையில், சட்டப்பேரவை உறுப்பினராக, அமைச்சராக மீட்பு பணியில் ஈடுபட்டேன்” என்றார்.