உதகை: உதகையில் இருந்து பெம்பட்டி, இத்தலார் கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை எனக் கூறி, பொதுமக்கள் 50- க்கும் மேற்பட்டோர் போக்குவரத்து கிளை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நீலகிரி மாவட்டம் இத்தலாரை அடுத்த பெம்பட்டி எனும் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு தினமும் காலை 10, மாலை 4.30 மணிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு சிரமமாக இருப்பதால் கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஏற்கெனவே இயக்கப்பட்ட 2 பேருந்துகளும், கடந்த 4 மாதங்களாக சரிவர இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக மாலை 4.30 மணிக்கு உதகையிலிருந்து புறப்படும் பேருந்து முற்றிலும் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பணி மற்றும் பள்ளி, கல்லூரி முடிந்து வீடுகளுக்கு செல்லும் பெம்பட்டி கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, பெம்பட்டி கிராமத்துக்கு பேருந்து நிறுத்தப்பட்டதை கண்டித்து, ஊர் தலைவர் ஆரி தலைமையில் நேற்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, "ஏற்கெனவே ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும்தான் பேருந்து இயக்கப்பட்டு வந்தது, கூடுதலாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவந்த நிலையில், அதுவும் சரிவர இயக்கப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது. எங்கள் கிராமத்துக்கு முன் இருக்கக்கூடிய இத்தலார் எனும் ஊர் வரை மட்டும் சில சமயங்களில் பேருந்து வந்துவிட்டு திரும்புகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் பணி முடிந்து வீடு திரும்புபவர்கள் அங்கிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி வழியாக நடந்து செல்ல வேண்டியுள்ளது. அந்தப் பகுதியில் கரடி, சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பீதியுடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இத்தலாரில் இருந்து ரூ.200 கொடுத்து ஆட்டோவில் செல்ல வேண்டியுள்ளது.
எனவே, பொதுமக்களை வன விலங்குகள் தாக்கும் முன்னர் பெம்பட்டி கிராமத்துக்கு சரியாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். அரசு போக்குவரத்து கழக உதகை மண்டல பொது மேலாளர் நடராஜன் கூறும்போது, "இன்று (நேற்று) மாலை முதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் தினமும் வழக்கம்போல பேருந்து இயக்கப்படும்" என்றார்.