சேலம்: காட்டுக்கோட்டையில் புதியதாக சேகோ ஆலை தொடங்க எதிர்ப்பு தெரிவித்து சேலம் கோட்டை மைதானத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் காட்டுக்கோட்டை ஊராட்சியில் புதியதாக ஜவ்வரிசி ஆலை ( சேகோ ) தொடங்க தனியாருக்கு அரசு அனுமதி அளித்து உள்ளது. இதை கைவிட வலியுறுத்தியும், புதிதாக ஆலை தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காட்டுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் நேற்று காலை சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐக்கிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பரமசிவம், ஆனந்த், உதயகுமார் முன்னிலை வகித்தனர். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் குருசாமி போராட்டத்தை தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டம் காட்டுக்கோட்டை ஊராட்சியில் 1,500 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இங்கு நீர் வழி கால்வாய்கள் செல்கின்றன. இந்த பகுதியில் சேகோ ஆலை தொடங்குவதால் கால்வாயின் நீர்வழித் தடங்கள் அழியும் அபாயம் ஏற்படும். சேகோ ஆலையில் இருந்து வெளியேறும் கழிவினால் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்படும். எனவே சேகோ ஆலை அமைக்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பேசினர்.
இதில் ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் சங்கரய்யா, பொதுச்செயலாளர் கோவிந்தன் உள்பட 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.