தமிழகம்

குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் லலிதாவின் சிகிச்சைக்கு ரூ.5 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: சாலை விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சென்னை வடக்கு மண்டல குழந்தைகள் நலக் குழுஉறுப்பினர் லலிதாவின் மருத்துவச் செலவுக்கு ரூ.5 லட்சம் வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை ராயபுரம் என்ஆர்டி மேம்பாலத்தில் கடந்த 9-ம் தேதி நேரிட்ட சாலை விபத்தில், சமூக ஆர்வலரும், சென்னை வடக்கு மண்டல குழந்தைகள் நலக் குழுஉறுப்பினருமான லலிதா பலத்தகாயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அவரின் குடும்பத்தினர் மருத்துவச் செலவுக்கு போதுமான நிதியின்றி பெரிதும் சிரமப்பட்டு வருவதாகவும், அவருக்கு நிதிஉதவி வழங்குமாறும் கோரிக்கைகள் வந்தன. வழக்கறிஞர் லலிதா குழந்தைகள் நலக் குழு உறுப்பினராகவும், ஏழை மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை உதவிகளை அளித்தும், மக்கள் பணியாற்றி வருகிறார்.

அவரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டும், அவர் விரைவில் உடல்நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியில் ஊக்கத்துடன் செயலாற்ற, அவரது மருத்துவச் செலவுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்துரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின்வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT