சென்னை: தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில், பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம்அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், ஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மு.அன்பரசு தொடங்கி வைத்தார். சங்கத்தின் மாநில தலைவர் சி.பரமேஸ்வரி, துணை தலைவர் பி.பரமேஸ்வரி, பொதுச் செயலாளர் பா.ராணி, பொருளாளர் க.ஜெயலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள்மற்றும் 250-க்கும் மேற்பட்ட கிராமசுகாதார செவிலியர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று, உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது, கிராம சுகாதார செவிலியர்கள் கூறியதாவது: தடுப்பூசி பணி, தாய் சேய் நலம், குடும்ப நலப் பணி, கர்ப்பிணிகளுக்கான பிக்மி கணினி பணி என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இந்த சூழலில், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பான விவரங்களை யு-வின் செயலி மூலம் உடனுக்குடன் பதிவு செய்யும் பணியையும் எங்கள் மீது சுமத்துவது வருத்தமாக உள்ளது.
அந்தசெயலி குறித்து எங்களுக்கு எதுவும்தெரியாத நிலையில், சிக்கலானஅந்த பணியை எங்கள் மீது சுமத்துவது சரியல்ல. இதனால், மற்றபணிகள் பாதிக்கப்படுகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை.
கிராமங்களில் 5 ஆயிரம் மக்களுக்கு ஒரு கிராம செவிலியர் தாய் சேய் நல பணி செய்வது என்ற நிலை மாறி, இப்போது 10ஆயிரம் மக்களுக்கு ஒருவர் எனபணி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு தாய் சேய் நலப் பணியை செய்யும்நிலையில் ஒவ்வொரு நகர நல செவிலியர்களும் உள்ளனர். அவர்களுக்கு பதவி உயர்வும் கிடைப்பது இல்லை. எனவே, முறைப்படி பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள 2 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.