காஞ்சிபுரம்: தமிழகத்தில் தபால் துறையின் வாயிலாக 50 நகரங்களில் ஏற்றுமதி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது என்று சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஜி.நடராஜன் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அஞ்சல்துறை சார்பில் மின் வணிகம் மற்றும் அஞ்சலக ஏற்றுமதி மையம் தொடங்கியிருப்பது குறித்த விளக்க கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஜி.நடராஜன் தலைமை தாங்கினார். அஞ்சல் துறையின் வெளிநாட்டு வர்த்தகப் பிரிவு இயக்குநர் ராஜலட்சுமி தேவராஜ், கைத்தறி ஏற்றுமதி மற்றும் ஊக்குவிப்பு கவுன்சில் நிர்வாக இயக்குநர் என்.தர், காஞ்சி பட்டுப் பூங்காவின் செயல் இயக்குநர் வி.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் துறை சென்னை மண்டல இயக்குநர் சோமசுந்தரம் வரவேற்றார்.
அஞ்சல் துறைத் தலைவர் பி.பி.ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தென்கொரியாவுக்கு வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பிய பார்சலை பெற்றுக் கொண்டு அதற்குரிய ரசீது வழங்கினார்.
நிகழ்வில் சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஜி.நடராஜன் பேசியதாவது: தமிழகத்தில் 50 நகரங்களில் அஞ்சல்துறை ஏற்றுமதி மையங்களை தொடங்கியிருக்கிறது. ஏற்றுமதியாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே 219 நாடுகளுக்கு பொருட்களை அஞ்சல் துறை மூலம் ஏற்றுமதி செய்யலாம்.
இருப்பிடத்துக்கே வந்து பார்சல்களை பெற்றுக் கொள்கிறோம். தேவைப்பட்டால் பேக்கிங் செய்து கொடுத்தும் பார்சல்களை ஏற்றுமதி செய்கிறோம். பிற நிறுவனங்களை விட குறைந்த கட்டணமே பெறப்படுகிறது.
சின்னஞ்சிறு ஏற்றுமதியாளர்களும், தனி நபர்களும் ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து விபரங்களை தெரிவிக்கவும், வழிகாட்டவும் அஞ்சல் துறை மூலம் ஏற்பாடுகள் செய்துள்ளோம். எந்த ஒரு வணிகரும் சர்வதேச வர்த்தகத்தின் சிக்கல்களை எளிதில் எதிர்கொள்ள வாய்ப்பளிக்கவும், ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் ஏற்றுமதி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.
இந்தக் கூட்டத்தில் காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மைய உதவி இயக்குநர் ஆர்.சசிகலா, கைத்தறி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் இணை இயக்குநர் சுந்தர் முருகேசன் ஆகியோருடன் 76 ஏற்றுமதியாளர்களும் கலந்து கொண்டனர். நிறைவாக அஞ்சல்துறை காஞ்சிபுரம் கோட்ட கண்காணிப்பாளர் அமுதா நன்றி கூறினார்.