ராமேசுவரம்: இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பாலம் தேவையா என்பது குறித்து பொது வாக் கெடுப்பு நடத்த வேண்டும் என இலங்கையின் கத்தோலிக்க கார்டினல் மால்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2015-ம் ஆண்டில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிபராக மைத்ரிபால சிறிசேனா வந்ததும் இந்திய - இலங்கை அரசுகள் இடையே தனுஷ்கோடியிலிருந்து இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு கடல் வழியாகப் பாலம் அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பாலம் அமைக்க ரூ. 22 ஆயிரம் கோடி நிதியை வழங்க ஆசிய வளர்ச்சி வங்கியும் முன்வந்தது.
ஆனால், இந்தத் திட்டத்துக்கு இலங்கை அரசு அப்போது ஆர்வம் காட்டவில்லை. உலகளாவிய கரோனா பரவல் அதைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் அந்நாட்டு அரசுஉள்ளது. இதனால், இலங்கையிலிருந்து தமிழகப் பகுதிகளுக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்தை விரிவுப்படுத்துவதற்கும் தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கவின் அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
கடந்த மாதம் டெல்லியில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் நரேந்திர மோடி இடையேயான சந்திப்பின்போது, இலங்கையில், இந்தியா செயல்படுத்தி வரும் திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் இந்தியாவிலுள்ள தனுஷ்கோடிக்கும் இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கும் இடையே பாலம் அமைப்பதற்கான திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிலையில், கொழும்பில் உள்ள அன்னை பசிலிக்கா ஆலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆராதனை நிகழ்வில் இலங்கையின் கத்தோலிக்க கார்டினல் மால்கம் ரஞ்சித் பேசிய தாவது: இலங்கை எப்பொழுதும் சுதந்திர நாடாகவே இருந்து வருகிறது. நாம் எந்த ஒரு நாட்டுக்கும், அரசுக்கும் அடிமையாக இருந்ததில்லை.
நாம் வேறொரு நாட்டிலிருந்து பிரியவும் இல்லை. இலங்கை தனி நாடாக இருந்து வருகிறது. ஆனால், இலங்கையின் சில பகுதிகளை நமது அரசாங்கம் பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் இலங்கை மற்ற நாடுகளுக்குப் பணிந்து நாட்டை அழிவை நோக்கி ஆட்சியாளர்கள் கொண்டு செல்கின்றனர். இது நீடித்தால் நம் மக்களுக்கென்று எதுவும் மிச்சம் இருக்காது.
தற்போது இலங்கைக்கும், இந்தியாவுக்கும் பாலம் அமைப்பதற்காக இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. இரு நாட்டுக்கும் இடையே பாலம் கட்டும் யோசனைக்கு இலங்கை மக்களிடம் முதலில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். பொதுமக்கள் கருத்து இல்லாமல் இவற்றைச் செய்வது தவறு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.