தமிழகம்

உதயநிதி ஸ்டாலின் காரை வழிமறித்து மனு அளித்த விவசாயிகள்

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காரை வழிமறித்து தேசிய தென்னந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.அய்யாக் கண்ணு தலைமையிலான விவசாயிகள், விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை அளிக்க வேண்டும். விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 28-ம் தேதி முதல் கடந்த ஒரு மாதமாக திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சியிலிருந்து நேற்று அரியலூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் சென்றார். சிந்தாமணி அண்ணா சிலை அருகே அவரது கார் வரும் போது, அதை வழிமறித்த பி.அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், அவரிடம் கோரிக்கை மனுவை அளித்து, நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

மனுவை பெற்றுக் கொண்ட, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்து, அங்கிருந்து புறப்பட்டார். இதைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களது காத்திருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

SCROLL FOR NEXT