லஷ்கர் – இ – தொய்பாவின் முக்கிய தீவிரவாதி அப்துல் சுபானை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
இவர் தீவிரவாத கருத்துகளை பரப்புதல், இளைஞர்களை லஷ்கர் – இ – தொய்பா அமைப்பில் சேர்த்து அவர்களை பயிற்றுவித்தல், தீவிரவாதத் தாக்குதலை திட்டமிடுதல் உள்ளிட்ட செயல்களை செய்து வந்துள்ளார்.
டெல்லியின் சராய் காலே கான் பஸ் நிலையத்தில் கடந்த வாரம் அப்துல் சுபானை (42) கைது செய்ததாக கூறியுள்ள டெல்லி போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
ராஜஸ்தான், ஹரியாணா, பிஹார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாத அமைப்பில் சேர்க்க அப்துல் சுபான் முயன்றுள்ளார்.
அவர் கார்ப்பரேட் நிறுவனங்களின் பெரும்புள்ளிகளை கடத்திச் சென்று அதிகளவில் பணம் பறித்து, தீவிரவாதச் செயல்களுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டிருந்தார் என்று விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
அப்துல் சபான், ஹரியாணா மாநிலம் மேவாத் மாவட்டம் குமத்பிஹாரி பகுதியைச் சேர்ந்தவர். ஏற்கெனவே ஒருமுறை குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்துக்கு வாகனத்தில் வெடி பொருள்கள், துப்பாக்கிகளை கொண்டு சென்றவழக்கில் அப்துல் சுபான் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக 8 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.