ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11-12-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
செய்தியாளர்: ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ளவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும், இளம்பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என்றெல்லாம் அதிமுக சார்பில் அறிவிக்கப்படுகிறதே?
மு.க.ஸ்டாலின்: இதுபோல இன்னும் எத்தனை உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை அவர்கள் கொடுத்தாலும், ஓபிஎஸ்ஸும் - இபிஎஸ்ஸும் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் எத்தனை குட்டிக் கரணங்களைப் போட்டாலும், படுத்து உருண்டு - பிறண்டாலும், அவர்கள் டெபாசிட் வாங்குவதே அரிது.
செய்தியாளர்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா அதிகம் நடப்பதால் இடைத்தேர்தல் மீண்டும் ரத்து செய்யப்படலாம் என பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் தெரிவித்து இருக்கிறாரே?
ஸ்டாலின்: இதுபற்றி நான் பலமுறை குறிப்பிட்டு இருக்கிறேன். ஏற்கனவே ஒருமுறை தேர்தல் நிறுத்தப்பட்டதன் காரணம் என்னவென்றால், 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையின்போது கண்டெடுக்கப்பட்டு, அதனால் தேர்தல் ரத்தானது. அதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர்தல் இப்போது மீண்டும் நடத்தப்படுகிறது.
எனவே, இந்தத் தேர்தலில் அப்படிப்பட்ட முறைகேடுகள் நடைபெறக்கூடாது, அதற்குரிய நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முறையாக எடுக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் மனுக்களை வழங்கியிருக்கிறோம். ஆகவே, இடைத்தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.
செய்தியாளர்: ஆளுங்கட்சியே தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறதே?
ஸ்டாலின்: இருக்கலாம். தற்போது, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு நடந்த அதிமுகவின் செயல் வீரர்கள் கூட்டத்தில், “இரண்டு பேரும் சேர்வதற்காகவே தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது”, என்று ஓபிஎஸ்ஸும் – இபிஎஸ்ஸும் பேசியிருப்பதால், அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு மத்திய அரசோ அல்லது தேர்தல் ஆணையமோ செயல்படும் நிலை இருப்பதை பார்க்கின்றபோது, இந்த சந்தேகமும் ஏற்படுகிறது.
செய்தியாளர்: தொல்.திருமாவளவன் தலையை துண்டிக்க வேண்டும் என்று இந்துத்வா அமைப்புகளை சேர்ந்த சிலர் அறிவித்துள்ளார்களே?
ஸ்டாலின்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இதுதொடர்பாக தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். ஆனால், அதன் பிறகும் சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு, இதை அரசியல் ஆக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சதிகளில் ஈடுபட்டு, இப்படிப்பட்ட செய்திகள் வெளியாவது உள்ளபடியே கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களை உடனடியாக அவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று திமுக சார்பில் நான் கடுமையாக எச்சரிக்கிறேன்.
செய்தியாளர்: காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்கள் குறித்து முறையாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்கிறதா?
ஸ்டாலின்: புயலால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ள பிரச்னையைப் பொறுத்தவரையில், இன்றைக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எத்தனை பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்று ஒரு எண்ணிக்கையை அறிவித்து இருக்கிறார். அமைச்சர் ஒரு கணக்கை சொல்லி இருக்கிறார். தலைமைச் செயலாளர் வேறொரு எண்ணிக்கையை சொல்லி இருக்கிறார். முதலமைச்சர் வேறொரு எண்ணிக்கையை சொல்கிறார். எனவே, முறைப்படி கணக்கெடுப்பு நடத்துவதில் கூட மத்திய – மாநில அரசுகள் அலட்சியமாக இருந்து வருகின்றன.
கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்தால் மட்டுமே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். நாளைய தினம் திமுக மீனவரணியின் சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தின் முன்பாக, மத்திய – மாநில அரசுகள் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று வலியுறுத்தி, மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
அந்தப் போராட்டத்தில் நானும் பங்கேற்கவிருக்கிறேன். அதுமட்டுமல்ல, மீனவர்களின் பிரச்னைகள் குறித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் மேதகு ஆளுநர் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். தற்போது அவர் ஊரில் இல்லை என்பதால், நாளை மறுநாள் நேரம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே, அவரை நாளை மறுநாள் நேரில் சந்தித்து, மீனவர் பிரச்னைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைப்போம்.