சென்னை: "கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது புதிய மற்றும் விரிவாக்கத் திட்டத்துக்கான முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொண்டுள்ளன. 2022-23ம் நிதியாண்டில் தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 14 லட்சத்து 53 ஆயிரத்து 321 கோடி ரூபாயாகும். வளர்ச்சி விகிதத்தில் இது 8.19 விழுக்காடாகும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட UPS நிறுவனம், இந்தியாவில் முதலாவதாக, சென்னை, போரூரில் அமைத்துள்ள தொழில்நுட்ப மையத்தை (Technology Centre) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.28) திறந்து வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது புதிய மற்றும் விரிவாக்கத் திட்டத்துக்கான முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொண்டுள்ளன. முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்களை அமைத்து வருகிறோம். வளர்ந்து வரும் துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், துறை சார்ந்த கொள்கை வெளியீடுகளை வெளியிட்டு வருகிறோம்.
அந்த வகையில், மாநிலத்தில் ஒருங்கிணைந்த, நம்பகமான, செலவு குறைந்த மற்றும் நிலைக்கத்தக்க சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காகவும் திட்டங்களை தீட்டினோம். தமிழ்நாடு சரக்குப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்குப் போக்குவரத்துத் திட்டம், 2023 கடந்த மார்ச் மாதம் என்னால் வெளியிடப்பட்டது. சரக்குப் போக்குவரத்துத் துறைக்கென சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு கிராமத்தில் பல்முனையப் போக்குவரத்துப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. தொழிற்சாலைகள் நிறைந்த கோயம்புத்தூர் மாவட்டத்திலும் ஒரு பல்முனையச் சரக்குப் போக்குவரத்துப் பூங்கா அமைக்கப்படவுள்ளது.
உலக அளவில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சிக்கு ஏற்ப, நமது தொழில்துறையும் உரிய மாற்றங்களை மேற்கொண்டு, அதே வேகத்தில் பயணம் மேற்கொள்வது அவசியமானது. இதனை மனதில் கொண்டு, கடந்த ஆண்டு தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கையை நான் வெளியிட்டேன். நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு (Industry 4.0) ஏற்ப, நமது தொழிலகங்களையும், தமிழக இளைஞர்களையும் தயார்படுத்திட வேண்டும் என்பதில் எங்கள் அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது.
தமிழகத்தின் ஏழை, எளிய மாணவர்களுக்கும், வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களில் திறன் பயிற்சி அளித்து, அவர்கள் எதிர்கால வேலைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், எனது கனவுத் திட்டமான “நான் முதல்வன்” செயல்பாட்டில் இருப்பதை அனைவரும் அறிவீர்கள். இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு, டாடா டெக்னாலஜீஸ் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து 71 அரசு தொழில் பயிற்சி நிலையங்களைத் (Government ITIs) தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தியுள்ளது.
தொழில்துறை புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொடக்கநிலைத் தொழில் முனைவோர் விரைவில் வளர்ந்திடவும், தமிழகத்தில் உயர் தொழில்நுட்ப வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், அரசு திட்டமிட்டு வருகிறது. நமது இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோருக்கு, அதிநவீன மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்திடவும் எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் (TIDCO) இணைந்து மூன்று புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
> பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான தசோ சிஸ்டம்ஸ் (Dassault Systems) உடன் இணைந்து, தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையமும் –
> ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான சீமென்ஸ் உடன் இணைந்து, தமிழ்நாடு திறன்மிகு & மேம்பட்ட உற்பத்தி மையமும் –
> அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான ஜி. இ. ஏவியேஷன் உடன் இணைந்து தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையமும் அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பெரும்புதூர் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காக்களில் உலகத்தரம் வாய்ந்த தொழில் புத்தாக்க மையங்கள் (Industrial Innovation Centres) அமைக்கப்பட்டுள்ளன. இந்த வசதி வாய்ப்புகளை அனைத்துத் தொழில் நிறுவனங்களும் பயன்படுத்தி, தங்களது தொழில் வளர்ச்சியை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.கடந்த சில ஆண்டுகளாகவே, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres) அதிகரித்துள்ளதாக அறிகிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரையில், 2021-ஆம் ஆண்டிலிருந்து, இதுவரை, முப்பதுக்கும் மேற்பட்ட GCC-க்கள் தமது புதிய நிறுவனங்களையோ அல்லது விரிவாக்கத் திட்டங்களையோ நிறுவியுள்ளன.
இந்த மையங்கள் மூலம் 47 ஆயிரம் நபர்களுக்கு உயர்தரத் திறன் மிகுந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் உள்ள GCC-க்களின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அண்மையில் வெளியிடப்பட்ட குஷ்மேன் & வேக்ஃபீல்ட் அறிக்கையின்படி, பொறியியல் பட்டதாரிகளின் இருப்பு, வணிகம் புரிவதற்கும், வாழ்வதற்கும் நிலவும் எளிதான சூழல் மற்றும் நல்ல நிர்வாகம் போன்ற காரணிகளால், இந்தியாவிலேயே GCC-க்களுக்கான முதல் 2-ஆம் அடுக்கு நகரமாக கோயம்புத்தூர் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், சரக்குப் போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மையில், உலகளாவிய முன்னணி நிறுவனமான UPS, சென்னை போரூரில் 400-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு, குறிப்பாக, கிராமப்புற இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி அளித்து பணியமர்த்தும் திட்டத்துடன் அமைத்துள்ள இந்தத் தொழில்நுட்ப மையத்தை (Technology Centre) திறந்து வைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனது கனவுத் திட்டமான “நான் முதல்வன்” திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, இந்த மையத்தில் உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புப் பயிற்சி (Internship) பெறுவதற்கான கடிதங்களை வழங்கும் வாய்ப்பும் கிட்டியது, உள்ளபடியே எனக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.
கரோனா நெருக்கடிக்குப் பிறகும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மிகச் சீராக இருப்பதாகவும், உயர்ந்து வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் “தி இந்து” ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியை உங்களில் பலரும் படித்திருப்பீர்கள். தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் வழிகாட்டுதலுடன், மாநிலப் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை சார்பில் சில ஆய்வுகள் நடத்தப்பட்டன. அப்போது கிடைத்த புள்ளிவிவரங்களை வைத்துத்தான் ‘இந்து நாளிதழ்’ அந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
கரோனா என்ற கொடுமையான காலக்கட்டத்தில்தான் நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தோம். கரோனா மருத்துவ நெருக்கடியை மட்டுமல்ல, நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியது. ஆனால், கரோனாவையும் வென்றோம்; நிதி நெருக்கடியையும் சேர்த்தே வென்றுள்ளோம்.
2011-12 நிதியாண்டு முதல் கரோனாவுக்கு முந்தைய காலம் வரை மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்ற இறக்கங்களுடன் 5.80 விழுக்காடாக இருந்தது. தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி, நிலையான விலைகளின் அடிப்படையில், 2022-23ம் நிதியாண்டில் தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 14 லட்சத்து 53 ஆயிரத்து 321 கோடி ரூபாயாகும். வளர்ச்சி விகிதத்தில் இது 8.19 விழுக்காடாகும். 2021-22-ஆம் ஆண்டில், நடப்பு விலைகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிரா முதலிடத்தையும், தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
2021-22 மற்றும் 2022-23-இல் அகில இந்திய அளவிலான பணவீக்கம் 9.31 விழுக்காடு மற்றும் 8.82 விழுக்காடாக இருந்த நிலையில், தமிழகத்தின் பணவீக்கக் குறியீடு 2021-22-இல் 7.92 விழுக்காடாகவும், 2022-23-இல் 5.97 விழுக்காடாகவும் குறைந்துள்ளது என்றும் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது புள்ளிவிவரம் மட்டுமல்ல; இந்த ஆட்சிக்கு கிடைத்த நற்சாட்சிப் பத்திரம்.
தமிழகத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன். இந்த அளவுகோலை 2034-ஆம் ஆண்டுக்குள் நாம் எட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையை ‘தி இந்து’ நாளிதழ் உறுதி செய்து எழுதி இருக்கிறது. இந்த நல்ல செய்தியை உங்களோடு பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியடைவதோடு, 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என உங்களுக்கு அன்போடு அழைப்பு விடுக்கிறேன். உங்களது தொழில் முயற்சிகள் வெற்றி பெற எனது வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் பேசினார்.