சென்னை: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி, இன வேறுபாடுகளைக் களைவதற்கான வழிமுறைகளை வகுப்பதற்காக உருவாக்கப்பட்ட நீதிபதி சந்துரு தலைமையிலான ஆணையம் 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இளைய சமுதாயத்தினர் மத்தியில் சாதி, இன உணர்வு பரவியிருப்பது, எதிர்கால தமிழகத்தின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய முக்கியப் பிரச்னை என்று தெரிவித்துள்ள தமிழக முதல்வர், இதில் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத நல்லிணக்க சூழலை உருவாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்குவதற்காக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து, உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இந்தக் குழுவுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த ஆணையம் காவல் துறையினர், கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைப் பெற்று, அரசுக்கு 6 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள கட்டிடத்தில் இந்த ஆணையம் செயல்படும். ஆக்கப்பூர்வமான முறையில் சாதி, இன பேதமற்ற சமூகத்தை உருவாக்க, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து, அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் குறைகளைத் தெரிவிக்க ஏதுவான குறைதீர் அமைப்பை உருவாக்க, தக்க வழிகாட்டுதல்களை அரசுக்கு வழங்க வேண்டும்.
இதற்காக கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக சிந்தனையாளர்கள், காவல் துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், குழந்தைகள் நலக் குழுவினர், சிறார் நீதி வாரியம், சாதி அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டு தண்டனை பெற்ற சிறுவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி, தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை அரசுக்கு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.