தமிழகம்

100 நாள் வேலை திட்டப் பயனாளிகள் ஆக. 31-க்குள் ஆதாரை இணைப்பது கட்டாயம்

செய்திப்பிரிவு

சென்னை: நூறு நாள் வேலை திட்டப் பயனாளிகள் வரும் 31-க்குள் சம்பளம் பெறும் வங்கிக் கணக்கில் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிராம மக்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) கடந்த 2005-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் உள்ளவருக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஊரக உள்ளாட்சிகளில் பணிவாய்ப்பு வழங்கத் தவறினால், ஊதியத்தை அபராதமாக வழங்கும் வகையில் விதிகள் உள்ளன.

இந்நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோருக்கான ஊதியம், தற்போது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் திட்டங்கள் அனைத்திலும், பயனாளிகளுக்கே உரிய தொகை செல்வதை உறுதி செய்யும் வகையில், வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இணைக்கப்படும் ஆதார் எண் சரிபார்க்கப்பட்டு, அதனடிப்படையில் வங்கிக் கணக்கில் சம்பளத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்திலும், வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பிப். 1-ம் தேதி முதல் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் சம்பளம் பெற ஆதார் இணைப்பு கட்டாயம் என்றும், இல்லாவிட்டால் சம்பளம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, ஆக. 31-ம் தேதி வரை ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

100 நாள் வேலை அட்டை, வங்கிக் கணக்கு, ஆதார் எண் ஆகியவற்றை இணைக்க வேண்டும். இதற்காக வங்கியில் உரிய படிவத்தைப் பெற்று, பூர்த்திசெய்து வழங்க வேண்டும்.

தமிழகத்தில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர், தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காமல், ஊதியம் பெறுவதாகக் கூறப்படுகிறது. எனவே, வரும் 31-க்குள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு இணைக்காவிட்டால், சம்பளம் வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT