சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் திடீரென ஆவின் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்துள்ளது, ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாகக் காரணங்களுக்காக, ஆவின் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களை அவ்வப்போது பணியிட மாற்றம் செய்வது வழக்கம். அந்தவகையில், சேலம், திண்டுக்கல், கோவை, விருதுநகர், மதுரை, தேனி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருச்சி ஆகிய 9 மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியங்களில் தர உத்தரவாதப் பிரிவில் பணியாற்றும் 15 ஊழியர்கள் கடந்த 2-ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இவர்களில் 13 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் பணியாற்றிய மாவட்டத்தில் இருந்து, மற்றொரு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த இடமாற்றம் ஆவின் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பால் முகவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்களை நிர்வாக ரீதியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டுமெனில், கல்வியாண்டு தொடங்குவதற்கு முந்தைய ஏப்ரல் 1 முதல் மே 31 வரைதான் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற அரசாணை நடைமுறையில் இருக்கிறது.
ஆனால், இந்த அரசாணையை மதிக்காமல், 9 மாவட்ட ஒன்றியங்களில் பணியாற்றும் 15 தர உத்தரவாத ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேர் பெண்கள். இதில் ஆவின் அதிகாரிகள் திட்டமிட்டு செயல்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
பணியிட மாற்றம் இல்லாத காலகட்டத்தில், பணியிட மாற்றம் செய்ய வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட ஊழியர்களிடமிருந்து விருப்ப மனு பெற வேண்டும். ஆனால், விருப்ப மனு பெறாமல், தர உத்தரவாதப் பிரிவு உதவிப் பொது மேலாளரின் ஆலோசனையின் பேரில், ஆவின் நிர்வாக இயக்குநர் வினீத் பணியிட மாறுதல் உத்தரவுக்கு அனுமதி அளித்திருப்பது அதிகார துஷ்பிரயோகமாகும். எனவே, பணியிட மாறுதல் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.