விளாத்திகுளம் அருகே கண்டு எடுக்கப்பட்ட பிடாரி சிற்பம். 
தமிழகம்

விளாத்திகுளத்தில் 9-ம் நூற்றாண்டு பிடாரி சிற்பம் கண்டெடுப்பு

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிடாரி சிற்பம் கண்டெடுக்கப்பட்டு, உப்பளத் தொழிலாளர்களால் வணங்கப்பட்டு வருகிறது.

விளாத்திகுளம் அருகே பெரியசாமிபுரம் கிராம உப்பள பகுதியில் மிகவும் பழமையான பிடாரி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. தகரசெட் அமைத்து அந்த சிற்பத்தை அதில் வைத்து உப்பளத் தொழிலாளர்கள் வணங்கி வருகின்றனர்.

பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர் குணசேகரன், பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர் தர் ஆகியோர் பிடாரி சிற்பத்தை ஆய்வு செய்தனர்.

அவர்கள் கூறியதாவது: இந்த சிற்பம் பிடாரி என்ற ஏகவீரி அன்னையாகும். தொடக்க காலங்களில் தாய் தெய்வ வழிபாடு முக்கியத்துவம் பெற்று இருந்தது. தவ்வை, கொற்றவை, சப்தமாதர்கள் என, பல்வேறு தாய் தெய்வ வழிபாடுகள் இருந்தாலும், இந்த சிற்பங்கள் அனைத்தும் ஊருக்குள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன.

ஆனால், ஏகவீரி அன்னை ஊரின் எல்லையில் தான் இருப்பாள். பெரியசாமிபுரத்தில் பிடாரி சிற்பம் 4 அடி உயரம், 2 அடி அகலத்தில் உள்ளது. இந்த சிற்பத்தின் காலம் 9-ம் நூற்றாண்டு ஆகும். எல்லைப்பிடாரி என்ற பெயரும் உண்டு. காளியின் அம்சமாகவும் கருதப்படு கிறது.

தலையில் கரண்ட மகுடம், கழுத்தில் ஆபரணங்களுடன் காட்சி தருகிறார். வலது காதில் பிடாரி சிற்பத்துக்கே உரித்தான பிரேத குண்டலம், இடது காதில் பத்ர குண்டலம் உள்ளது.

சூலாயுதம், வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் உடுக்கை தாங்கிய 8 கரங்களுடன் அன்னை உக்கிரமாக காட்சி தருகிறாள். இடது கீழ்கையில் அசுரனின் தலை உள்ளது. பிடாரி அன்னையை அரசர்கள் போர் தெய்வமாக வணங்கியுள்ளனர். இங்கு ஆரியம்மன் என்ற பெயரில் மக்கள் வணங்கி வருகின்றனர்.

பெரியசாமிபுரம் கிராம பகுதி கிறிஸ்தவ மக்களும் பிடாரிக்கு பொங்கல் வைத்து வழிபடுவது குறிப்பிட வேண்டிய அம்சம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT