சேலம்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை; சிபிஐ-யை நாடவுள்ளதாக, பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார்.
இது குறித்து சேலத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியது: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை திசை திருப்பவே கனகராஜ் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் இல்லை என முன்னாள் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆனால், கோடநாடு வழக்கை விசாரித்த ஊட்டி நீதிமன்றம், கனகராஜ் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் என குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்பட 12 பேரிடம் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பழனிசாமியை மட்டும் காவல்துறை விசாரிக்காதது ஏன்? முதல்வர் ஸ்டாலினுக்கும், பழனிசாமிக்கும் இடையே மறைமுக உடன்பாடு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கையால் திமுக தொண்டர்களே அதிருப்தியில் உள்ளனர். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்னும் முடிவடையவில்லை.
ஓபிஎஸ் அணியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் அடுத்த மாதம் காஞ்சிபுரத்தில் தொடங்குகிறது. அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் பேசுகிறார். அதிமுக எங்களுக்கு தான் சொந்தம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை; சிபிஐ-யை நாடவுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.