மயிலாப்பூர் சாய்பாபா கோயிலுக்கு வரும் பக்தர்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வியாழக்கிழமை தோறும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக பெருநகர சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் சாலையில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலுக்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். அங்குள்ள சாலைகளைக் கடப்பதே அப்பகுதி மக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் சவாலாக இருக்கும்.
எனவே போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் 31-ம் தேதிமுதல் வாரந்தோறும் வியாழக்கிழமை மட்டும் போக்குவரத்து மாற்றங்களைக் காவல் துறை மேற்கொள்ளும்.
இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், ஆர்.கே.மடம் சாலையிலிருந்து சாய்பாபா கோயில் நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம் போல் வெங்கடேச அக்ரஹாரம் சாலையில் அனுமதிக்கப்படும். ஆனால் சாரதாபுரம் சாலை, டாக்டர் ரங்காசாலை மற்றும் கிழக்கு அபிராமபுரம் சாலையிலிருந்து சாய்பாபா கோயில் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் வெங்கடேச அக்ரஹாரம் சாலையில் அனுமதிக்கப்படாது.
இவை வி.சி.கார்டன் 1-வது தெரு வழியாக திருப்பி விடப்பட்டு செயின்ட் மேரிஸ் சாலை வழியாக மாற்றிவிடப்படும்.
அதேபோல அலமேலுமங்காபுரம், டாக்டர் நஞ்சுடா சாலை, வி.அக்ரஹாரம் லேன்-1, வி.அக்ரஹாரம் லேன் ஆகிய சாலைகளிலிருந்து வரும் வாகனங்கள் வெங்கடேச அக்ரஹாரம் சாலையிலிருந்து ஆர்.கே.மடம் சாலை செல்ல அனுமதிக்கப்படாது.
இந்த வாகனங்கள் வெங்கடேச அக்ரஹாரம் சாலையில் ஒருவழிப் பாதையாக சாரதாபுரம்சாலை நோக்கி அனுமதிக்கப்படும். எனவே இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.