மயிலாப்பூரிலேயே பிறந்து வாழ்ந்துவரும் 60, 70 வயதைத் தொட்டிருக்கும் முதியவர்களிடம் இந்தப் பகுதியின் சிறப்பு என்ன என்றால், 3 `R’ களைச் சொல்வார்களாம். அவை – ஆர்.ஆர்.சபா (ரசிக ரஞ்சனி சபா), ராயர் கஃபே, ராஜாஜி சீவல் கடை. சென்னையில் தொடங்கப்பட்ட பழைமையான சபாக்களில் ஆர்.ஆர்.சபாவும் ஒன்று. பல சந்தர்ப்பங்களில் மியூசிக் அகாடமியின் நிகழ்ச்சிகள் ஆர்.ஆர்.சபாவில் நடந்திருக்கின்றன. 1945ல் மியூசிக் அகாடமியும் ஆர்.ஆர்.சபாவும் இணைந்து சியாமா சாஸ்திரி வாரத்தை கொண்டாடியிருக்கின்றன. ஆர்.ஆர்.சபா தற்போது புதுப்பிக்கப்பட்டு டிசம்பர் இசை விழாவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த சபாவில் டம்மீஸ் டிராமா குழு தன்னுடைய 20ம் ஆண்டு தொடக்க விழாவை டிசம்பர் 23 அன்று நடத்தவிருக்கின்றது.
கல்வி, விருந்தோம்பல், மருத்துவம், அறிவியல், கணிதம், பக்தி இப்படி பல தலைப்புகளில் இருக்கும் நல்ல கருத்துகளையும் பிரச்சார தொனியில் இல்லாமல் தன்னியல்பில் நாடகத்தில் கொண்டுவந்து ரசிகர்களின் ரசனையை உயர்த்தும் நாடகக் குழு என்னும் சிறப்பை பெற்றிருப்பது டம்மீஸ் டிராமா. மேடையிலும் அரங்க நிர்மாணத்திலும் 50 பேர் இந்தக் குழுவில் உள்ளனர். நாடகம் என்னும் கலையின் மீது கொண்ட காதலால் ஸ்ரீவத்ஸன், ஸ்ரீதரன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரின் முயற்சியால் தொடங்கப்பட்டது டம்மீஸ் டிராமா.
அதென்ன டம்மீஸ்?
90களில்தான் கணினி அறிமுகமானது. இதையொட்டி `ஃபிளாப்பி’ என்று குழுவுக்கு பெயர்வைக்க நினைத்தாராம் ஸ்ரீவத்ஸன். நண்பர்களின் ஆதரவு அதற்கு இல்லாமல் போக, அன்றைக்கு கணினி தொடர்பான நூல்களை அதிக அளவில் அச்சிட்ட பதிப்பகமான டம்மீஸ் பெயரை குழுவுக்கு வைத்துவிட்டாராம்.
தங்களின் 20 ஆண்டு பயணத்தின் முக்கிய தருணங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் டம்மீஸ் டிராமா குழுவின் ஸ்ரீவத்ஸன்.
கட்டணமில்லா நாடக சேவை
“ஒருசில நாடகக் குழுக்களைத் தவிர, மற்ற நாடகங்களுக்கு மக்களின் ஆதரவு இல்லாத சூழல் இருந்தது. இந்த காலகட்டத்தில்தான் என்னுடைய இரண்டு நண்பர்களோடு இணைந்து டம்மீஸ் நாடகக் குழுவை தொடங்கினோம். கட்டணத்தை வசூலிப்பதில்லை. நாடகத்தை வளர்க்க இதுவே சிறந்த வழி என்று நினைத்தோம். 20 ஆண்டுகளில் 32 நாடகங்களை நான் எழுதி, அரங்கேற்றியிருக்கிறோம். கே. பாலசந்தர் சார் மீண்டும் நாடகத்தை இயக்குவதற்கு தயாரானபோது, அவருக்காக `பௌர்ணமி’ என்னும் நாடகத்தை எழுதிக் கொடுத்தேன்.
நாடகத்தின் இரண்டு கண்
ரசிகர்களை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்வதை நோக்கமாகக் கொண்டுதான் நாடகங்களை நடத்தவேணடும் என்பதை எங்களின் கொள்கையாகவே வைத்திருந்தோம். அதனால் இன்ஃபோடைன்மென்ட் (Information + Entertainment) வகை நாடகங்களையே ரசிகர்களுக்கு கொடுத்தோம்.
அறிவியலும் ஆன்மிகமும் இந்தியாவின் கண்கள். அவற்றை எங்களின் பெரும்பாலான நாடகங்களில் கையாண்டிருப்போம். `வைத்தியசாலா’ உள்ளிட்ட மூன்று நாடகங்கள் முழுக்க முழுக்க மருத்துவத்தை மையப்படுத்தியே இருக்கும்.
ராக்கெட் ஏவுதளமான இஸ்ரோவை மையப்படுத்தி `ஹனுமான்’ எனும் நாடகத்தை அரங்கேற்றினோம். கடந்த ஆண்டு `வாயு’ எனும் நாடகத்தை அரங்கேற்றினோம். மாருதி கார் நிறுவனம் இந்தியாவில் எப்படி வந்தது என்பதை கருவாகக் கொண்ட இந்த நாடகத்தில் ஸ்டேஜிலேயே மாருதி காரை கொண்டுவந்தோம்.
எல்லோருக்குமான நாடகம்
நாடகத்தின் வசனங்களில் ஆங்கிலப் பிரயோகம் அதிகம் இருக்கிறதே என்னும் குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் தேவைக்குத்தான் பயன்படுத்துகிறோம். I C U என்னும் ஒரு நாடகத்தில் மருத்துவம் சார்ந்த மொழியை ஆங்கிலத்திலேயே பிரயோகப்படுத்தியிருக்கிறோம். வலிந்து ஆங்கிலத்தை திணிப்பதில்லை. ஆனாலும் இந்தக் குறையை நிவர்த்தி செய்வோம். இதைவைத்து நகர்ப்புறத்தை சேர்ந்த ரசிகர்கள்தான் எங்களின் டார்கெட் ஆடியன்ஸ் என்னும் முடிவுக்கு யாரும் வரமுடியாது. ஏனென்றால், பொள்ளாச்சி போன்ற உள்ளடங்கிய ஊர்களிலும் எங்களின் நாடகத்தை ரசித்திருக்கிறார்கள்.
மேடை நிர்வாகம்
எங்களின் குழுவில் இருக்கும் 50 கலைஞர்களுமே காசை எதிர்பார்க்காமல் நாடகக் கலையை ரசிப்பவர்கள். எல்லோருக்கும் உரிய பொறுப்பை உணர்ந்து செயல்படுபவர்கள். எல்லோரின் ஒத்த சிந்தனைக்கு சாட்சியே, எங்கள் குழுவின் 20ம் ஆண்டைத் தொடங்கியிருக்கும் எங்களின் பயணம்.
ரசிகர்களை எங்களின் நாடகத்தில் பெரிதும் கவரும் அம்சம் மேடை நிர்வாகமும் நேர்த்தியான இயக்கமும். `பிரதிபிம்பம்’ என்னும் நாடகத்தில், சீனாவில் எப்படிப்பட்ட பொருள்கள் வீட்டில் புழக்கத்தில் இருக்கும் என்பதை ஆராய்ந்துபார்த்து, அதேபோன்ற பொருள்களை மேடையில் கவனமாக பயன்படுத்தியிருப்பார்கள். மேடை நிர்வாகத்துக்கு ஸ்ரீராம் - பிரசன்னா முழுப் பொறுப்பு. இப்படி ஒவ்வொரு துறையையும் ஈடுபாட்டோடு செய்கின்றனர் எங்களின் கலைஞர்கள்.
நேர ஒழுங்கு
நேர ஒழுங்கை நாங்கள் தொடங்கும் போது, கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. பொதுவாக ரசிகர்கள் 7 மணிக்கு நாடகம் என்றால் 7-20க்கு தொடங்குவதைத்தான் பார்த்திருக்கிறார்கள். அதனால் நேர ஒழுங்கை ஆரம்பத்திலிருந்து மிகவும் கண்டிப்பாக எங்களின் குழுவில் கடைப்பிடித்தோம். அதனால் சரியான நேரத்துக்கு வந்த 10 பேருக்கு மரியாதை தரும் வகையில் நாடகத்தை ஆரம்பித்துவிடுவேன். இந்த நேர ஒழுங்கை இப்போது ரசிகர்களும் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டனர்.
எங்கள் குழுவின் 20வது ஆண்டு தொடக்கவிழாவை ஒட்டி ஒவ்வொரு சபாவுடன் சேர்ந்து, ஏறக்குறைய 60 நாடக அரங்கேற்றங்களை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை நடத்தவிருக்கிறோம். புகழ்பெற்ற ரசிக ரஞ்சனி சபாவில் (ஆர்.ஆர்.சபா) டிசம்பர் 23 தொடங்கி ஜனவரி 1 வரை 10 நாடகங்களை அரங்கேற்றுகிறோம். ஜனவரியில் திருவான்மியூரில் லயன்ஸ் கிளப்போடு சேர்ந்தும் நாடகங்களை அரங்கேற்ற இருக்கிறோம்” என்றார் ஸ்ரீவத்ஸன்.