சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில், மாதவரம் – சோழிங்கநல்லுார் 5-வது வழித்தடத்தில், போரூர் – ஆலந்துார் இடையே மெட்ரோ ரயில் பணிகளை விரைவாக முடித்து, சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வழித் தடத்தில் 41 கி.மீ. தொலைவு வரை மேம்பால பாதையில் மெட்ரோ ரயில் பாதை அமைகிறது. இதனால், மற்ற இடங்களைக் காட்டிலும் இந்த வழித் தடத்தில் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள 250-க்கும் மேற்பட்ட துாண்களில் மேம்பால பாதைக்கான இணைப்பு பணிகள் நடைபெறுகின்றன. குறிப்பாக, போரூர்,குமணஞ்சாவடி ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதைக்காக, உயர்மட்டப் பாதை பணிகள் வேகமாகநடைபெற்று வருகின்றன.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. 2025 இறுதி முதல் மெட்ரோ ரயில்சேவை படிப்படியாக தொடங்கப்படும். போரூர் – ஆலந்துார் இடையே உயர்மட்டப் பாதை பணிகளை விரைவாக முடித்து, 2026-ம் ஆண்டு பிப்ரவரியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.