மதுரை: புரட்சித் தமிழர் பட்டத்தை முன்னாள் முதல்வர் பழனிசாமி பயன்படுத்தக் கூடாது என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
மதுரை அலங்காநல்லூரில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றியப் பொறுப்பாளர் நல்லையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு, மதுரையில் ஆக. 20-ம் தேதி நடந்த அதிமுக மாநாட்டில் புரட்சித் தமிழர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. ஏற்கெனவே தமிழ்நாடு கொங்கு இளைஞர்கள் பேரவை நிறுவனத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான தனியரசுவுக்கு புரட்சித் தமிழர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அந்த பட்டத்தை பழனிசாமி பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.