விபத்துப் பகுதிகளில் சிக்கியிருப்பவர்களுக்கு செல்போன் சிக்னல் கிடைக்க ஐஐடி சென்னையும் ஜப்பானில் உள்ள கெய்யோ பல்கலைக்கழகமும் இணைந்து புதிய யுக்தியை முன்வைத்துள்ளன.
இதன்படி, 50 மீட்டர் உயரம் கொண்ட ஒரு செல்போன் டவர் செய்ய வேண்டிய வேலையை, ஹீலியம் பலூனில் பொருத்தப்பட்ட கருவி செய்யும். ஹீலியம் பலூனை, தரையில் உள்ள கயிறுகள் கொண்டு கட்டுப்படுத்தி, 50 மீட்டர் உயரத்தில் பறக்க விட்டால், அது பிரதான செல்போன் டவரைப் போல செயல்படும்.
இத்திட்டத்தின் செயல்விளக் கத்தின்போது ஐஐடி சென்னையின் திட்டத்துறை முதல்வர் ஆர். டேவிட் கோலிப்பிள்ளை கூறும் போது, “அரை மணி நேரத்துக்குள் இந்த செல்போன் டவரை அமைத்து விடலாம். இது விபத்து பகுதியிலிருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்யும் தொலைவில் இருக்கலாம்” என்றார்.
விபத்து பகுதியில் ஒரு கம்பியில் ஜி.எஸ்.எம். வசதியை தரக்கூடிய கருவியையும், ஹீலியம் பலூனோடு தொடர்பு கொள்ளக் கூடிய கருவியையும் பொருத்தினால், அப்பகுதியில் இருப்பவர்களுக்கு இதன் மூலம் செல்போனில் சிக்னல் கிடைக்கும்.
இதுகுறித்து கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் பணிபுரியும் ஜப்பானை சேர்ந்த டாக்டர் கோடாரோ கடாஒகா கூறும்போது, “இந்த செல்போன் டவர் மூலம் விபத்து பகுதியில் சிக்கியிருப்பவர்களும், மீட்புக் குழுக்களும் செய்தி, ஒலி, ஒளி காட்சிகளை அனுப்பிக் கொள்ளலாம். 2011-ல் ஜப்பானில் நில நடுக்கம் ஏற்பட்டபோது இது போன்ற வேறொரு முறையை அமல்படுத்தினோம்” என்றார்.
இது 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டிசாநெட் எனப்படும் அவசரக்கால தகவல் தொடர்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில் ஐஐடி ஹைதராபாத், ஐஐடி கான்பூர், ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைகழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இத்திட்டத்தின் முழு செயல்விளக்கம், ஜூலை 24-ம் தேதி ஐஐடி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.