தமிழகம்

கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் விவசாயக் கடன்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் விவசாயத்தொழிலை மேம்படுத்த, கட்டுப்பாடுகளை தவிர்த்து குறைந்த வட்டியில் கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயக்கடன் வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது

"நம் நாட்டில் விவசாயிகள் 1 லட்சம் ரூபாய் வரை பயிர் சாகுபடி செய்வதற்கு மத்திய அரசு வங்கிகள் 7 சதவீத வட்டியில் விவசாய நகைக்கடன் வழங்குகிறது. இவ்வாறு வாங்கும் கடனை தவணை தவறாமல் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டியை மானியமாக மத்திய அரசு வழங்குகிறது. இதனால் 4 சதவீதமுள்ள வட்டியில் பயிர்க்கடன் கிடைக்கிறது.

ஆனால் தமிழகத்தில் கிராமப்புற தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் தங்கள் நகைகளை அடமானம் வைத்து பயிர்கடன் பெறும்போது அதற்கான வட்டியாக 12 சதவீதம் முதல் 14.5 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. இது விவசாயிகளை துன்புறுத்தும் நடவடிக்கை ஆகும். எனவே விவசாயிகளுக்கு மத்திய அரசு வங்கிகள் 7 சதவீத வட்டியில் நகைக்கடன் வழங்கும் போது தமிழக அரசும் அதே சதவீதத்தில் நகைக்கடன் வழங்க வேண்டும்.

மேலும் கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக விவசாயக்கடன் வழங்குவதற்கு தேவையற்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதாவது ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக விவசாயக்கடன் பெற வேண்டுமானால் அந்த விவசாயி தன்னுடைய நிலத்தை கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் பெயருக்கு அடமான பத்திரம் பதிவு செய்து தர வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இச்சூழலில் ஏழை, எளிய விவசாயிகள் விவசாயத்தொழில் செய்ய முடியாமல் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு நில அடமான பத்திரப் பதிவு செய்யப்படும் முறையை தவிர்த்து 3 லட்சம் ரூபாய் வரை பயிர் கடன் வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். மேலும் விவசாயிகளிடம் மத்திய அரசு வங்கிகள் நில உரிமையாளர் என்கிற உறுதிமொழியை மட்டும் பெற்றுக்கொண்டு, மானியமும் கொடுத்து, 4 சதவீத வட்டியில் எவ்வாறு நகைக்கடன் வழங்குகிறதோ அதே போல தமிழக அரசும் கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் 4 சதவீத வட்டியில் விவசாய கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முக்கியமாக தமிழகத்தில் விவசாயத்தொழிலை மேம்படுத்த விவசாயக்கடனை குறைந்த வட்டியில், கட்டுப்பாடுகளை தவிர்த்து, முறையாக, தொடர்ந்து வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமாகா. வலியுறுத்துகிறது" என ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT