சென்னை: தமிழகத்தில் மிகமுக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிலங்களை ஒருங்கிணைப்பதற்கான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்த சட்டமசோதா இயற்றப்பட்டு ஆளுநர்ஆர்.என்,ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. தமிழகத்தில்முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தும்போது அதற்கான நிலங்களை ஒருங்கிணைக்க இந்த சட்ட மசோதா வழி வகுக்கும்.இது ‘தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களான) சட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.
மாநிலத்தில் உற்பத்தி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான முக்கிய காரணியாக நிலம் உள்ளது.அரசு நிலங்களை ஒருங்கிணைத்தல், பரிமாற்றம், உரிமை மாற்றம்,ஒப்படைப்பு, குத்தகை போன்றவற்றில் தற்போதுள்ள நடைமுறையானது இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக படிப்படியாக தோன்றியது.
நிலங்களை பொறுத்தவரை உள்ளாட்சி அமைப்பு சட்டங்கள் உள்ளிட்ட சட்டங்களால் நிர்வகிக்கப்படுகிறது. அரசு நிலத்துக்கான உரிமையானது உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. திட்டங்களுக்கு பெரிய அளவில் நிலங்கள் தேவைப்படும் பட்சத்தில், பல்வேறு துறைகளின் கீழ் நிர்வாக உத்தரவுகள், குறிப்பாணைகள் பிறப்பிக்கப்படுதல் என அந்த நிலத்தை ஒருங்கிணைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், நேரம், பண இழப்பு ஏற்படுகிறது.
இயற்கையாகவே நீர்நிலைகள், ஆறுகள், ஓடைகள் தங்கள் பரப்பை விரிவாக்கி, போகும் பாதையையும் மாற்றிக் கொள்கின்றன. இவற்றை பொதுநலன் கருதி பாதுகாக்க வேண்டியது அவசியம். தனியார் நிலங்களின் வழியாக தண்ணீர் அதன் போக்கை மாற்றிக் கொள்ளும் பட்சத்தில், அந்த நிலத்துக்கான பரிமாற்ற முறையை சட்டப்படியாக ஒழுங்குபடுத்துவது, அதன்மூலம் நீர்நிலையைப் பாதுகாப்பது ஆகியவற்றுக்கு இந்த சட்டம் வழிசெய்கிறது.
சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்துக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது இசைவளித்துள்ளார். இதன்மூலம் இச்சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.