சென்னை: நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வுநிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. 41 நாள் பயணத்துக்கு பிறகு, நிலவின் தென்துருவப் பகுதிக்கு அருகே சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் பாகம் ஆக.23-ம் தேதி மாலை 6.04 மணிக்குவெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் சாதனையை இந்தியா படைத்தது.
இதற்கிடையே லேண்டர் கலனில் இருந்து ரோவர் கீழிறங்கும் படங்களை தொகுத்து அதன் காணொலியை இஸ்ரோ நேற்று காலை வெளியிட்டது. அதில் லேண்டரின் சாய்வுதளம் வழியாக அதனுள் இருந்த ரோவர் வாகனம் எளிதாக வெளியேறியதை தெளிவாக காண முடிகிறது. மேலும், ரோவர்சாய்வு தளத்தில் இறங்கும்போது அதிலிருந்த சோலார் தகடுகள் மின்சார சக்தியை (சார்ஜ்) பெறுவதற்காக சூரியன் இருக்கும் திசையை நோக்கி சரியான முறையில் திரும்பியது. இந்த நிகழ்வுகள் லேண்டரில்இருந்த இமேஜிங் கேமரா மூலம் துல்லியமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றிவரும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் விண்கலம் மூலம் 2 மணிநேரத்துக்கு ஒருமுறை லேண்டர் மற்றும் ரோவர் வாகனம் தொடர்ந்துகண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்விரு கலன்களும் தங்கள் ஆய்வில் கிடைக்கும் தரவுகளைசீரிய இடைவெளியில் புவிக்கு அனுப்பிவருகின்றன.
அரிய தகவல்கள் கிடைக்கும்: இதில் ரோவர் வாகனம் லேண்டர்வழியாகவே இஸ்ரோவுக்கு தகவல்களை வழங்கும். அந்தவகையில் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து செல்லும்போது ரோவரின் சென்சார்கள் சேகரித்த சில தரவுகள் மற்றும் லேண்டர் எடுத்த பல்வேறு புகைப் படங்கள் இதுவரை நமக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கலன்களின் ஆயுட்காலம் இன்னும் 12 தினங்கள் வரை இருப்பதால்நிலவு பற்றிய பல்வேறு அரிய தகவல்கள் வரும் நாட்களில் கிடைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ரோவர் வாகனம்நிலவில் 8 மீட்டர் தூரம் வரை நகர்ந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ரோவர் வாகனத்தின் அனைத்து செயல்பாடுகளும் திட்டமிட்டபடி சீராக உள்ளன. நிலவின் மேற்பரப்பில் ரோவர் சுமார் 8 மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. மேலும், ரோவரில் இருந்த லிப்ஸ் மற்றும் ஏபிஎக்ஸ்எஸ் சாதனங்களின் ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக சந்திரயான்-3 திட்டத்தில் இடம்பெற்ற உந்துவிசைகலன், லேண்டர் மற்றும் ரோவர் கலன்களில் உள்ள அனைத்து ஆய்வுக் கருவிகளும் சிறப்பாக செயல்படுகின்றன’’ என்று கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இஸ்ரோ வருகை: சந்திரயான்-3 லேண்டர் விண்கலம் நிலவில் தரையிறங்கிய போது, வெளிநாடு சுற்றுப் பயணத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி,காணொலி காட்சி வாயிலாக நேரலையில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இன்று நாடு திரும்பும்பிரதமர் மோடி நேரடியாக பெங்களூரு சென்று, அங்குள்ள இஸ்ரோஆய்வு மையத்தில் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
ஆர்பிட்டர் அனுப்பிய படத்தை நீக்கிய இஸ்ரோ: சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் தற்போது நிலவின் சுற்றுப்பாதையில் வலம்வந்து ஆய்வு செய்துவருகிறது. இந்த ஆர்பிட்டர் கலன், ஆக.23-ம் தேதி நிலவில் தரையிறங்கிய லேண்டரை அன்று இரவு 10.17 மணியளவில் படம் பிடித்து அனுப்பியது. அந்த படத்தை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று காலை வெளியிட்டது. ஆர்பிட்டர் ஒஎச்ஆர்சி உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா மூலம் எடுக்கப்பட்ட இந்த படங்களை அடுத்த சில நிமிடங்களில் இஸ்ரோ நீக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.