உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் 
தமிழகம்

ஆர்.எஸ்.பாரதியின் பேட்டியை கண்டு நிலைதடுமாறினால் திறமையை இழந்தவனாகி விடுவேன்: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேட்டியைக் கண்டு நிலைதடுமாறினால் நீதிபதியாக இருக்கும் திறமையை இழந்தவனாகி விடுவேன் என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.

திமுக அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களும், லஞ்ச ஒழிப்பு போலீஸாரும் பதிலளிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ‘சிறப்பு நீதி்மன்றங்களில் முடித்து வைக்கப்பட்ட சில குறிப்பிட்ட (திமுக அமைச்சர்கள் தொடர்பான) வழக்குகளை தேர்ந்தெடுத்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கிறார். ஆனால், ரூ.3,600 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிரான வழக்கில் மட்டும் மறுவிசாரணை நடத்துவது என்பது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என தீர்ப்பளி்த்துள்ளார்’ என சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதியின் பேட்டியை நீதிமன்ற அவமதிப்பாக கருதி அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதி்ப்பு வழக்கு எடுக்க வேண்டும் என நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பாக வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி நேற்று முறையீடு செய்தார்.

அதற்கு நீதிபதி, ‘‘உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றதற்கான எனது கடமையை சட்டப்படியும்,மனசாட்சிபடியும் செய்துள்ளேன்.பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் எது வேண்டுமென்றாலும் சொல்வார்கள். அதைப்பற்றி கவலைப்படுவதுமில்லை, சஞ்சலப்படுவதுமில்லை’’ என்றார்.

மேலும், ஆர்.எஸ்.பாரதியின்பேட்டியை தானும் பார்த்ததாகவும்,அதைப் பார்த்து நிலைதடுமாறினால் நீதிபதியாக இருக்கும் திறமையை இழந்தவனாகி விடுவேன் என்றும், இதுபோன்ற கருத்துகளை ஒருபோதும் பெரிதாக கருத்தில் கொள்வதில்லை என்றும் தெரிவித்து அவமதிப்பு வழக்கு எடுக்க மறுத்துவிட்டார்.

SCROLL FOR NEXT