சென்னை: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால், காவிரி விவகாரத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மென்மையான போக்கைகடைபிடிப்பதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, கர்நாடக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, இனியும் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்றும், பிரதமரை சந்தித்து முறையிடுவது என்றும் முடிவு செய்திருப்பதாக கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது என்பதற்காக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வழக்கம்போல, காவிரி விவகாரத்தில் மென்மையான போக்கை கடைபிடிப்பது வருந்தத்தக்கது. ‘காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்தால்தான், தமிழகத்தில் காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணி அமைக்கப்படும்’ என்று திமுக தலைமை கூறினால், தமிழகத்துக்கு உரிய நீர் உடனடியாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அரசு தனது பொறுப்பை உணர்ந்து, உடனே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு திறக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.