கோவை: இயற்கையைப் பாழாக்கி வருவதன் விளைவுதான் பருவநிலை மாற்றத்துக்குக் காரணம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், நொய்யல் ஆறு அறக்கட்டளை இணைந்து கோவையில் நடத்தும் நொய்யல் பெருவிழா நேற்று தொடங்கியது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் தலைமை வகித்தார். இதில், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: நம் நாட்டில் நீர்நிலைகளுடனான தொடர்பு என்பது, உணர்வுகளுடன் தொடர்புடையது. ஆனால், நம் கலாச்சாரம், உயிர்த்தன்மையைச் சிதைக்கும் எண்ணத்துடன் வந்த அந்நியர்களின் படையெடுப்பு மற்றும்ஆக்கிரமிப்பால் அந்த உணர்வு துண்டிக்கப்பட்டது.
அன்னை பூமியைப் பாழாக்கி வரும் இந்த காலத்தில், இதுபோன்ற நிகழ்வுகள் அவசியமானவை. இயற்கையைப் பாழாக்கி வருவதன் விளைவுதான், பருவநிலை மாற்றத்துக்குக் காரணம். தண்ணீர் இல்லையென்றால் ஒன்றும் இல்லை என்பதால், நீரை அன்னையாகப் பாவித்து, அதைப் பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.