சென்னை: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சார்பில் செப்.1-ம் தேதிவரை நடைபெறும் சிறப்பு தொழில் கடன் விழாவில்பங்கேற்று பயன்பெறும்படி தொழிலதிபர்கள், தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கடந்த 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, அப்போது முதல் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழில் அமைப்புகளை விரிவுபடுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
அண்ணா சாலையில் இயங்கி வரும் தொழில் முதலீட்டுக் கழகத்தின் சென்னை கிளை அலுவலகத்தில், ``குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்''களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சிறப்புதொழில் கடன் விழாவில் தொழில் முதலீட்டுக் கழகத்தின் பல்வேறு நிதித் திட்டங்களின் சிறப்பம்சங்கள் மற்றும் அரசு மானியங்கள் குறித்து விளக்கம் தரப்படுகிறது.
மேலும் தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியத்துடன் (அதிகபட்சம் ரூ.1.50 கோடி வரை மானியம்) நிதி உதவி வழங்கப்படுகிறது. முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பை தொழில் அதிபர்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர் பயன்படுத்தி தொழில் திட்டங்கள் குறித்த விவரங்களுடன் வருகை தந்து மேற்படி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதில், ஆக.28-ம் தேதி (திங்கள்கிழமை), கிண்டி, ஜிஎஸ்டி சாலையில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவன பிரதான கூட்ட அரங்கில், மாலை 4 மணிக்கு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில், சிறப்பு தொழில் கடன் விழா நடைபெறுகிறது. இதில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.