தமிழகம்

உண்மை தகவல்களை மறைத்து உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: உண்மைத் தகவல்களை மறைத்து உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பாடி திருஞானசம்பந்தர் தெருவில் வசிக்கும் பச்சையப்பன் என்பவர், தனது நிலத்துக்கு பட்டா கேட்டு அளித்த மனுவை பரிசீலிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘மனுதாரர் பட்டாகோரும் நிலம், திருவல்லீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானது. அந்தநிலம் மீட்கப்பட்டுவிட்டது. அறநிலையத் துறையின் உத்தரவை மறைத்து மனுதாரர் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த தகவல்களை மறைத்து கோயில் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்’ என அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, ‘‘உண்மைத் தகவல்களை மறைத்து உள்நோக்கத்துடன் வழக்கை மனுதாரர் தொடர்ந்துள்ளார். எனவே, அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்ததொகையை ஆக.27-ம் தேதிக்குள்பாடி திருவல்லீஸ்வரர் கோயில் நிர்வாகத்துக்கு அவர் செலுத்த வேண்டும்’’ என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT