தமிழகம்

பூந்தமல்லி அருகே சாலையோரம் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

செய்திப்பிரிவு

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே சாலையோரம் கிடந்த பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை போலீஸார் மீட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், கோவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா. இவர், பூந்தமல்லி அருகே மலையம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், ஷோபனா வழக்கம் போல் நேற்று காலை தன் இரு சக்கர வாகனத்தில் பணிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவர் தான் பணிபுரியும் நிறுவனம் அருகே சென்றபோது, சாலையோரம், பிறந்து 3 நாட்களே ஆன, பச்சிளம் பெண் குழந்தை கட்டைப்பையில் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஷோபனா, பூந்தமல்லி போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து, சம்பவ இடம் விரைந்த பூந்தமல்லி போலீஸார், அந்த குழந்தையை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற குழந்தை, சென்னை, எழுப்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறது.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பூந்தமல்லி போலீஸார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT