தமிழகம்

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8-ல் கூடுகிறது

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 8-ம் தேதி காலை 10 மணியளவில் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், "வரும் 8.01.2018 அன்று காலை 10 மணியளவில் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் ஒக்கி புயல் விவகாரம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒக்கி புயலால் கன்னியாகுமரி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் மாயமான விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

டிடிவிக்கு முதல் கூட்டத்தொடர்..

மேலும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்.கே.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி தினகரனுக்கு இது முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஊடகங்கள் வாயிலாக ஆளும் அதிமுக அரசை விமர்சித்துவந்த டிடிவி தினகரன் இனி சட்டப்பேரவையில் அதிமுகவினர் மீது எத்தகைய கேள்விகளை தொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முழுநேர ஆளுநர் தலைமையில்..

ரோசய்யாவுக்குப் பிறகு முழு நேர ஆளுநர் தலைமையில் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பது கவனிக்கத்தக்கது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடைசியாக, கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதிவரை நடந்தது. அதன்பின், பேரவைக் கூட்டத்தை முடித்து வைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். இந்நிலையில், அக்.6-ம் தேதி புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றார். வழக்கமாக ஒரு சட்டப்பேரவை கூட்டம் முடிந்தால், அது முடிந்த தேதியில் இருந்து அடுத்த 6 மாதத்துக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், ஜன. 18-ம் தேதிக்குள் அடுத்த கூட்டத்தை நடத்த வேண்டும். மேலும், ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டும்.

பேரவை கூட்டத்தை கூட்டுவதற்கான அனுமதி கோப்புகள், பேரவை செயலகத்தில் இருந்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையைக் கூட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுமதி அளித்திருக்கிறார்.

இதன் காரணமாக ஜனவரி 8-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது.

SCROLL FOR NEXT