சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்த விவகாரத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான இவர், எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கடந்த 20-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில், கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மக்களை தூண்டி விடும் வகையில் பேசியுள்ளார்.
தமிழக மக்களின் பிரதிநிதியாகவும் ஒரு மாநிலத்தின் அமைச்சராகவும் இருந்து கொண்டு இதுபோன்று மக்கள் உணர்வை தூண்டும் வகையில் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.