சென்னை: மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மின்னணு ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதை ஊக்குவிக்கும் வகையில், வரும் நவம்பர் மாதம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், ஆண்டுதோறும் நவம்பர் மாதம் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது நடைமுறையில் உள்ளது. முன்பு ஓய்வூதியம் பெறுவோர் இந்த சான்றிதழை நேரில்சென்று சமர்ப்பிக்க வேண்டி இருந்தது. இதற்காக, வயதானஓய்வூதியதாரர்கள் வங்கிகளுக்கு சென்று பல மணி நேரம்காத்திருந்து இப்பணியை செய்து முடிக்க வேண்டிய நிலை இருந்தது.
இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மின்னணு (டிஜிட்டல்) முறையில்ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும் தொழில்நுட்பத்தை மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
இதற்காக, ‘ஜீவன் பிரமான்’என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, முக அங்கீகாரம் தொழில்நுட்பம் மூலமாக ஆயுள் சான்றிதழை பெறவும்,அதை டிஜிட்டல் வடிவில் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு சமர்ப்பிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கடந்த 2022-ம் ஆண்டு நாடு முழுவதும் 37 நகரங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில், 35 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை வரும் நவ.1-ம்தேதி முதல் 30-ம் தேதி வரை தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள 100 முக்கிய நகரங்களில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், 50 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு ஆயுள் சான்றிதழ் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.