தமிழகம்

வரைமுறையின்றி கல், மண் ஏற்றிச் செல்லும் லாரிகள்: ஶ்ரீவைகுண்டம் பகுதியில் விபத்து அபாயம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: ஶ்ரீவைகுண்டம் பகுதிகளில் மணல் மற்றும் கற்களை ஏற்றிச் செல்லும் கனகர வாகனங்கள் எந்தவித பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் விதிகளை மீறிச் செல்வதால் விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்கு உட்பட்ட பேட்மாநகரம் மற்றும் ஸ்ரீமூலக்கரை பகுதிகள் மற்றும் கருங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் தனியார் கல் குவாரிகள் மற்றும் கிரசர் ஆலைகளில் இருந்து தினமும் கற்கள் மற்றும் சரள் ஏற்றிச் செல்ல ஏராளமான கனரக வாகனங்கள் செல்கின்றன.

இதேபோன்று உரிமம் முடிவடைந்து செயல்படாமல் உள்ள கல் குவாரிகளில் தேங்கியுள்ள தண்ணீரை உறிஞ்சி எடுத்து தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்வதற்காக தினமும் பல டேங்கர் லாரிகள் வந்து செல்கின்றன. மேலும், ஶ்ரீவைகுண்டம் வட்டத்துக்கு உட்பட்ட மீனாட்சி பட்டி குளத்தில் இருந்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உடன்குடி அனல் மின் நிலைய பணிகளுக்காக சரள் மண் அள்ளி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தினமும் 50-க்கும் மேற்பட்ட கனகர லாரிகள் வந்து செல்கின்றன.

இவ்வாறு தினமும் மணல் மற்றும் கற்களை ஏற்றிச் செல்லும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகள் ஸ்ரீவைகுண்டம் வழித்தடத்தில் திருநெல்வேலி, திருச்செந்தூர், தூத்துக்குடி சாலைகளில் சென்று வருகின்றன. இந்த லாரிகளில் எந்தவித பாதுகாப்பு அம்சங்களும் கடைபிடிப்பதில்லை. இந்த வாகனங்களால் சாலைகள் சேதமடைவதுடன், விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து நிலத்தடிநீர் பாதுகாப்பு இயக்க தலைவர் ராஜா கூறியதாவது: மீனாட்சிபட்டி குளத்தில் இருந்து ஏராளமான லாரிகளில் சரள் மண் கொண்டு செல்லப்படுகிறது. இதை உரிய ஆய்வு செய்ய வேண்டும் என ஶ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், பகலிலும், இரவிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் ஏதுமின்றி அதிக பாரத்தோடு சரள் மண் கொண்டு செல்லப்படுகிறது. சரள் மண் கொண்டு செல்லும்போது டிப்பர் லாரிகளை தார்ப்பாய் போட்டு மூடாததால், பின்னால் வரும் வாகன ஓட்டிகள், எதிரே வரும் பேருந்து பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

விதிகளை மீறும் கனரக வாகனங்களை காவல்துறையினர் சோதனையிட்டு, அவர்கள் கொண்டு செல்லும் அனுமதி சீட்டை ஆய்வுக்கு உட்படுத்தி விதிமீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தனியார் கல் குவாரிகள் மற்றும் கிரசர் ஆலைகளில் இருந்து கற்கள் மற்றும் சரல்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் விதிகளை மீறி செல்கின்றன. அவைகளையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

SCROLL FOR NEXT