சென்னை: வணிகவரித் துறை சார்பில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் வணிகவரித் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி, வணிகவரி ஆணையர் தீரஜ்குமார், கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஜிஎஸ்டிசோதனை, சுற்று ரோந்துப்படையினர் நடத்தும் சோதனையின்போது சிறிய தவறுகளுக்கும் அதிகஅளவில் அபராதம் வசூலித்தல், வரியில்லாத பொருட்களுக்கும் வரி, அபராதம் விதித்தல் போன்றவை குறித்து தெரிவித்தனர்.
வணிக நிறுவனங்களில் ஆய்வுசெய்து விதிமீறல் இருந்தால், நோட்டீஸ் வழங்கி, வாய்ப்பு அளித்துவரி ஏய்ப்பு இருந்தால் மட்டும் அபராதம் விதிக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் ஜிஎஸ்டி அமலாக்கத்தில் உள்ள அத்துமீறல்களை மாநில அரசு தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டன.
கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: வணிகர்கள் சங்கங்களின் ஆலோசனை, குறைகளைக் கேட்டறிந்தோம். ஒருசில கோரிக்கைகளை சரி செய்வதுடன், சமாதான் திட்டத்தை ஒரு மாதத்தில் நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளோம். வணிகர்களுக்கு உள்ள சிறு குறைகளையும் நிவர்த்தி செய்ய உள்ளோம். ஜிஎஸ்டி கவுன்சிலில் சில பொருட்களுக்கான வரிகளை குறைப்பது தொடர்பாகவும், அதில் ஏற்படும் குறைபாடுகள் குறித்தும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர். இவை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, கவுன்சில் கூட்டம் நடைபெறும்போது நிதியமைச்சர் மூலமாக அங்கு தெரிவிக்கப்படும்.
ஜிஎஸ்டி வரி வசூலில் தவறுகுறித்து சேலம் மாவட்டத்தில் குறிப்பாக விதிவிலக்குள்ள மஞ்சளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக வணிகர்கள் தெரிவித்தனர். அந்த அபராதத்தை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டுள்ளோம். தவறுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட பொருட்களை விற்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு ஒரு இடத்தில் ஆய்வுநடத்தினால், மாநில அரசு அந்த இடத்தில் ஆய்வு செய்யாது என்பதையும் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.