நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த வைத்தியநாதசாமி(45) என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில், அவருடன், ராமராஜன் (32), செல்வராஜ் (50) ஆகியோரும், அருள்பாண்டியன் என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில் அவருடன், கண்ணன் (40), சாமிநாதன் ( 28), பிரதீபன் (20) ஆகியோரும் கடந்த 21-ம் தேதி கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு 2 ஃபைபர் படகுகளில் வந்த இலங்கை கடல்கொள்ளையர்கள் 6 பேர், வைத்தியநாதசாமி, அருள்பாண்டியன் ஆகியோரது படகுகளில் அடுத்தடுத்து ஏறி, அவர்களை இரும்புக் கம்பியால் தாக்கினர்.
பின்னர், படகுகளில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, பேட்டரி, மீன்பிடி வலைகள், மீன்கள், செல்போன், 20லிட்டர் டீசல் உள்ளிட்ட ரூ.2 லட்சம்மதிப்பிலான பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர்.
தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் வெள்ளப்பள்ளம் கடற்கரைக்கு நேற்று காலை வந்துசேர்ந்தனர். கம்பியால் தாக்கப்பட்டு காயமடைந்த ராமராஜன், வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
மீனவர்கள் அச்சம்: இதுகுறித்த புகாரின் பேரில், வேதாரண்யம் கடலோரக் காவல் குழும போலீஸார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். கடந்த 21-ம் தேதி ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்கி பொருட்களைக் கொள்ளையடித்த நிலையில், தற்போது வெள்ளப்பள்ளம் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.