சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2006-ம் ஆண்டு முதல் எனது பிறந்தநாளை ‘வறுமை ஒழிப்பு தினமாக’ கடைபிடித்து வருகிறேன். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அவர்களால் முடிந்த அளவுக்கு மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், கடந்த காலங்களில் இலவச வீட்டு மனை நிலங்கள், இலவச திருமணம், பெண் குழந்தைகள் வைப்பு நிதி, இலவச கணினி பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகள் செய்யப்பட்டன. மேலும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் வழங்குவதுபோல, மதிய உணவு மற்றும் நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் இந்த ஆண்டும் வழங்கப்படும்.
இதேபோல், கட்சிக் கொடியை அனைத்து இடங்களிலும் ஏற்றி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏழை மக்களுக்கு இந்த வறுமை ஒழிப்பு தினத்தில் நலத்திட்டங்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.